தம்பிக்கு சைக்கிள் தராததால் தாயார் திட்டுவார் என பயந்து 7-ம் வகுப்பு மாணவி தற்கொலை


தம்பிக்கு சைக்கிள் தராததால் தாயார் திட்டுவார் என பயந்து 7-ம் வகுப்பு மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 11 Nov 2020 10:15 PM IST (Updated: 11 Nov 2020 8:02 PM IST)
t-max-icont-min-icon

எருமப்பட்டி அருகே தம்பிக்கு சைக்கிள் ஓட்ட தராததால், தாயார் திட்டுவார் என்று பயந்து 7-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாள்.

எருமப்பட்டி,

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே உள்ள கோடாங்கிபட்டியை சேர்ந்தவர் தங்கதுரை (வயது 40), பால் வியாபாரி. இவருடைய மனைவி காமாட்சி (36). இவர்களுக்கு ராஜாமணி (12) என்ற மகளும், சக்திவேல் (5) என்ற மகனும் உள்ளனர். இவர்களில் ராஜாமணி எருமப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தாள்.

நேற்று முன்தினம் மாலை தங்கதுரை பால் வியாபாரத்திற்கும், காமாட்சி விவசாய காட்டுக்கு வேலைக்கும் சென்று விட்டனர். அதே நேரத்தில் ராஜாமணி வீட்டின் முன்பு சைக்கிள் ஓட்டிக்கொண்டு இருந்தாள்.

அப்போது தானும் சைக்கிள் ஓட்ட வேண்டும் என்று தம்பி சக்திவேல் கேட்டுள்ளான். அதற்கு அக்காள் ராஜாமணி தர முடியாது என்று கூறி உள்ளாள். சைக்கிள் தரவில்லை என்றால் அம்மாவிடம் கூறுவேன் என்று ராஜாமணியிடம் அவளுடைய தம்பி கூறியதுடன், அருகில் உள்ள விவசாய காட்டில் வேலை பார்க்கும் தாயார் காமாட்சியிடம் கூற சென்று விட்டான்.

இதனால் வீட்டுக்கு வந்ததும், தாயார் தன்னை திட்டுவார் என்று பயந்து ராஜாமணி வீட்டுக்குள் சென்று விட்டத்தில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றாள். இதனிடையே வீட்டுக்கு வந்த காமாட்சி தன்னுடைய மகள் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ராஜாமணியை நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால் அங்கு பணியில் இருந்த டாக்டர், மாணவி ராஜாமணியின் உடலை பரிசோதித்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து தகவல் கிடைத்ததும், எருமப்பட்டி போலீசார் மாணவி ராஜாமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியிலேயே வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story