ஐ.டி.ஐ. படித்தால் 100 சதவீதம் வேலைவாய்ப்பு: வளாகத்தேர்வை தொடங்கி வைத்து இணை இயக்குனர் பேச்சு


ஐ.டி.ஐ. படித்தால் 100 சதவீதம் வேலைவாய்ப்பு: வளாகத்தேர்வை தொடங்கி வைத்து இணை இயக்குனர் பேச்சு
x
தினத்தந்தி 11 Nov 2020 9:25 PM IST (Updated: 11 Nov 2020 9:25 PM IST)
t-max-icont-min-icon

ஐ.டி.ஐ. படித்தால் 100 சதவீதம் வேலைவாய்ப்பு உள்ளது என்று வளாகத்தேர்வை தொடங்கி வைத்து இணை இயக்குனர் லதா பேசினார்.

ஈரோடு, 

தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் தமிழகம் முழுவதும் வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள், இளம்பெண்களுக்கு தொழில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகளை அளிக்கும் வளாகத்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் வி.விஷ்ணு தலைமையில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் வேலை வழங்கும் நிறுவனங்களின் வசதிக்காக தனியார் வேலை வாய்ப்பு பெறுவதற்கான இணையதளம் தொடங்கப்பட்டு உள்ளது.

இந்த தனியார் வேலைவாய்ப்பு இணையதளத்தை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து ஏராளமான வேலை தேடுபவர்கள், வேலை அளிப்பவர்கள் இந்த இணையதளத்தில் பதிவு செய்து தங்களுக்கு தேவையானவர்களை தேர்ந்து எடுத்து வருகிறார்கள்.

இந்தநிலையில் தமிழ்நாடு அரசு தொழிற்பயிற்சி மையங்களில் (ஐ.டி.ஐ.) படித்து வரும் மாணவ-மாணவிகளுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் வளாகத்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி நேற்று ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள அரசு தொழிற்பயிற்சி மையத்தில் வளாகத்தேர்வு நடந்தது. இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் உதவி இயக்குனர் எம்.மகேஸ்வரி தலைமை தாங்கினார். ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி டி.ஜோதி முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் கோவை மண்டல வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இணை இயக்குனர் ஆ.லதா கலந்துகொண்டு வேலை வாய்ப்பு முகாமை தொடங்கி வைத்து, வளாகத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவருக்கு பணி நியமன உத்தரவினையும் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கோவை மண்டலத்தில் உள்ள 16 அரசு தொழிற்பயிற்சி மையங்களில் இந்த வளாகத்தேர்வு நடந்து வருகிறது. 2 வார காலம் இந்த முகாமானது நடைபெற இருக்கிறது. ஐ.டி.ஐ.களில் இறுதி ஆண்டு படித்து வரும் 2 ஆயிரத்து 600 மாணவ-மாணவிகள் தனியார் வேலை இணையம் மூலம் பதிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு பதிவு செய்த தனியார் நிறுவனங்கள் மூலம் இந்த வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது.

இந்த முகாமில் கோவை மண்டலத்தில் மட்டும் 160 நிறுவனத்தினர் நேரடியாக ஆட்கள் தேர்வு செய்கிறார்கள். இதில் டாடா, ஹூண்டாய், கேட்டர்பில்லர் போன்ற மிகப்பெரிய நிறுவனத்தினரும் தங்களுக்கு தேவையான வேலையாட்களை தேர்வு செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக ஐ.டி.ஐ. படித்தால் கூலி வேலைக்கு செல்லவேண்டும் என்ற தவறான எண்ணம் மக்கள் மத்தியில் உள்ளது. தொழில் நுட்ப பயிற்சி பெற்று எந்த சூழலிலும் வேலை செய்ய தயாராக இருக்கும் ஐ.டி.ஐ. படித்தவர்களையே பெரும்பாலான நிறுவனங்கள் விரும்பி வேலைக்கு எடுத்துக்கொள்கிறார்கள் என்பதை சமீபத்தில் நாங்கள் முழுமையாக தெரிந்து கொண்டு இருக்கிறோம். தற்போதைய சூழலில் ஐ.டி.ஐ. படித்த மாணவ-மாணவிகளுக்கு 100 சதவீதம் வேலைவாய்ப்பு உள்ளது. இதற்கு உதாரணமாக, தற்போது நடத்தப்பட்டு வரும் வளாகத்தேர்வில் இறுதி தேர்வு எழுதாத மாணவ-மாணவிகள் அனைவரும் அவரவர் தகுதிக்கு ஏற்ப தனியார் நிறுவனங்களின் பணி நியமன ஆணையை பெற்று இருக்கிறார்கள். குறைந்த பட்சம் மாதம் ரூ.9 ஆயிரம் ஊதியம் என்ற நிலைப்பாட்டில் இந்த வளாகத்தேர்வு நடக்கிறது.

ஐ.டி.ஐ. படிப்பை பொறுத்தவரை முழுக்க முழுக்க இலவசமாக தமிழக அரசு அளித்து வரும் கல்வியாகும். சீருடை, புத்தகங்கள், மடிக்கணினி, சைக்கிள் ஆகியவற்றுடன் மாதம் தோறும் ரூ.750 ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு மற்றும், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் அரசு ஐ.டி.ஐ.களில் சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள். ஆண்கள் 40 வயது வரை இந்த பயிற்சியில் சேரலாம். பெண்கள் 40 வயதுக்கு மேல் இருந்தாலும் பயிற்சியில் சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள். எனவே இந்த வாய்ப்புகளை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஈரோடு மாவட்டத்தில் கோபி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இதுபோன்ற வளாகத்தேர்வு நடக்கிறது. இதில் ஒரே நாளில் 16 பேர் வேலை உத்தரவாதம் பெற்று உள்ளனர். வருகிற 21-ந் தேதி வரை இந்த வளாகத்தேர்வு நடைபெறும். ஈரோடு மற்றும் கோபி அரசு ஐ.டி.ஐ.கள் மட்டுமின்றி கோவை மண்டலத்துக்கு உள்பட்ட கோவை, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி என 16 ஐ.டி.ஐ.களிலும் வளாகத்தேர்வு நடந்து வருகிறது. இதன் மூலம் ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு 100 சதவீதம் வேலை உத்தரவாதத்தை தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் உறுதி அளித்து உள்ளன.

இவ்வாறு கோவை மண்டல வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இணை இயக்குனர் ஆ.லதா கூறினார்.

முன்னதாக அரசு ஐ.டி.ஐ. பயிற்சி அதிகாரி மு.சீனிவாசன் வரவேற்றார். முடிவில் நாட்டுநலப்பணித்திட்ட அதிகாரி சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

Next Story