கோவில்பட்டியில் பெண் தற்கொலை வழக்கு: தந்தை, மகன் உள்பட 4 பேருக்கு தலா 2 ஆண்டு ஜெயில்


கோவில்பட்டியில் பெண் தற்கொலை வழக்கு: தந்தை, மகன் உள்பட 4 பேருக்கு தலா 2 ஆண்டு ஜெயில்
x
தினத்தந்தி 11 Nov 2020 10:07 PM IST (Updated: 11 Nov 2020 10:07 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் பெண் தற்கொலை செய்த வழக்கில் தந்தை, மகன் உள்பட 4 பேருக்கு தலா 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

தூத்துக்குடி,

கோவில்பட்டி முருகானந்தம் தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் கார்த்திக்குமார் (வயது 32). இவருக்கும் திருநகரை சேர்ந்த தேவேந்திரன் (59) என்பவருக்கும் இடையே உள்ளாட்சி தேர்தல் தகராறு காரணமாக முன் விரோதம் ஏற்பட்டது.

கடந்த 22-10-2011 அன்று தேவேந்திரன், அவரது மகன்கள் ராஜன், ஆனந்த், உறவினரான மந்திதோப்பை சேர்ந்த குருசாமி மற்றும் அதே பகுதியை சேர்ந்த செல்வம் ஆகியோர் கார்த்திக்குமார் வீட்டிற்கு சென்று உள்ளனர். அங்கு அவர் இல்லை என்பதால் அவரது தாய் தனலட்சுமியை அவதூறாக பேசி மிரட்டினர். இதனால் மனமுடைந்த தனலட்சுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோவில்பட்டி போலீசார் தேவேந்திரன் உள்ளிட்டவர்கள் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

2 ஆண்டு தண்டனை

இந்த வழக்கு தூத்துக்குடி மகிளா கோர்ட்டில் நீதிபதி பாண்டியராஜ் முன்னிலையில் நடந்து வந்தது. வழக்கு நடந்து கொண்டிருந்த நிலையில் செல்வம் இறந்துவிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, தேவேந்திரன், அவரது மகன்கள் ராஜன், ஆனந்த் மற்றும் உறவினர் குருசாமி ஆகியோருக்கு தலா 2 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சுபாஷினி ஆஜரானார்.

Next Story