பெங்களூருவில், வெவ்வேறு இடங்களில் கிரிக்கெட் சூதாட்டம்; 3 பேர் கைது ரூ.6½ லட்சம் பறிமுதல்
பெங்களூருவில் வெவ்வேறு இடங்களில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.6½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
பெங்களூரு,
ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று முன்தினம் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை, டெல்லி அணிகள் மோதிய இறுதி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை மையமாக வைத்து பெங்களூரு பையப்பனஹள்ளி அருகே பழைய மெட்ராஸ் ரோட்டில் உள்ள வணிக வளாகத்தையொட்டி 2 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருப்பதாக நேற்று முன்தினம் இரவு பையப்பனஹள்ளி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று சந்தேகப்படும் படியாக சுற்றிய 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் துமகூரு மாவட்டத்தை சேர்ந்த ரங்கநாத்(வயது 29), சோமேஷ்(30) என்று தெரிந்தது.
இவர்கள் 2 பேரும் செல்போன் செயலி மூலமாக குஜராத்தை சேர்ந்த 2 பேருடன் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. நேற்று முன்தினம் மட்டும் அல்லாமல் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் தொடங்கியது முதல் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, ரங்கநாத், சோமேசை பையப்பனஹள்ளி போலீசார் கைது செய்தார்கள். அவர்களிடம் இருந்து கிரிக்கெட் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய 2 விலை உயர்ந்த செல்போன்கள், ரூ.2 லட்சத்து 35 ஆயிரம் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
ரூ.4 லட்சம் பறிமுதல்
இதுபோல, நேற்று முன்தினம் நடந்த மும்பை, டெல்லி அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்ட ஒரு வாலிபர், தோல்வி அடைந்த நபரிடம் இருந்து பணத்தை பெற்றுக் கொண்டதுடன், வர்த்தூர் மெயின் ரோட்டில் உள்ள ஓட்டல் அருகே நிற்பது குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்திருந்தது. உடனே அங்கு சென்ற போலீசார், வர்த்தூரில் உள்ள பழைய தபால் நிலையம் அருகே வசிக்கும் சபீர்கான்(32) என்பவரை கைது செய்தார்கள்.
விசாரணையில், அவர் ஐ.பி.எல். கிரிக்கெட்டின் போது அனைத்து போட்டிகளிலும் சூதாட்டத்தில் ஈடுபட்டு இருந்தார். அவரிடம் இருந்து ரூ.4 லட்சம் ரொக்கம், ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான சபீர்கான் மீது வர்த்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story