உனசகி தாலுகாவில் சம்பவம் கால்வாய்க்குள் கார் பாய்ந்து தந்தை, தாயுடன் விவசாயி பலி 3 வயது மகனுடன் மனைவி தப்பினார்


உனசகி தாலுகாவில் சம்பவம் கால்வாய்க்குள் கார் பாய்ந்து தந்தை, தாயுடன் விவசாயி பலி 3 வயது மகனுடன் மனைவி தப்பினார்
x
தினத்தந்தி 12 Nov 2020 12:48 AM IST (Updated: 12 Nov 2020 12:48 AM IST)
t-max-icont-min-icon

உனசகி தாலுகாவில், காரை பின்னோக்கி இயக்கியபோது தறிகெட்டு ஓடி கால்வாய்க்குள் பாய்ந்ததில் தாய், தந்தையுடன் விவசாயி ஒருவர் பலியானார். அவரது மனைவி தனது 3 வயது மகனுடன் நீச்சலடித்து கரை சேர்ந்து உயிர் தப்பினார்.

யாதகிரி, 

விஜயாப்புரா மாவட்டம் சிந்தகி தாலுகா பன்னட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சரணகவுடா பீராதார்(வயது 61). விவசாயி. இவரது மனைவி ஜானகி(55). இவர்களது மகன் பவன் பீராதார்(34). இவரும் விவசாயி ஆவார். பவனின் மனைவி பிரேமா(28). இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் உள்ளான். சரணகவுடாவுக்கு சொந்தமான ஒரு விவசாய நிலம் யாதகிரி மாவட்டம் உனசகி தாலுகா குலபாலா கிராமத்தில் உள்ளது. நேற்று முன்தினம் காலையில் விஜயாப்புராவில் இருந்து சரணகவுடா தனது மனைவி, மகன், மருமகள் மற்றும் பேரனுடன் காரில் யாதகிரியில் உள்ள தன்னுடைய விவசாய நிலத்தை பார்வையிட வந்தார். காரை பவன் ஓட்டி வந்தார்.

தங்கள் நிலம் அமைந்திருக்கும் பகுதிக்கு வந்ததும், அப்பகுதியில் ஓடும் கால்வாய் ஓரமாக பவன் காரை நிறுத்தினார். பின்னர் அவர்கள் அனைவரும் நிலத்தை பார்வையிட்டனர்.

3 வயது மகனுடன்...

அதன்பின்னர் அவர்கள் மீண்டும் அங்கிருந்து விஜயாப்புராவுக்கு புறப்பட தயாரானார்கள். அதன்பேரில் அனைவரும் காரில் ஏறிக்கொண்டனர். காரை மீண்டும் பவனே ஓட்ட தயாரானார். அப்போது அவர் காரை பின்னோக்கி இயக்கி திருப்ப முயன்றார். அந்த சந்தர்ப்பத்தில் அவருடைய கட்டுப்பாட்டை இழந்த கார் பின்னோக்கி தாறுமாறாக ஓடி கால்வாயில் விழுந்தது. மேலும் கால்வாயில் அதிக அளவில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியதால் காரை வெள்ளம் அடித்துச் சென்றது.

இதனால் காருக்குள் சிக்கிக்கொண்ட சரணகவுடா உள்பட அனைவரும் கூச்சலிட்டனர். இதில் பிரேமா மட்டும் தனது 3 வயது மகனுடன் நீச்சல் அடித்து கரைக்கு வந்தார். பவன், சரணகவுடா, ஜானகி ஆகிய 3 பேரும் காருக்குள் சிக்கிக்கொண்டனர். அவர்களால் வெளியே வர முடியவில்லை.

3 பேர் பலி

சிறிது நேரத்தில் காரை முற்றிலுமாக மூழ்கடித்து வெள்ளம் அடித்துச் சென்றது. இதனால் காருக்குள் சிக்கிக்கொண்ட பவன், அவரது தந்தை சரணகவுடா, தாய் ஜானகி ஆகிய 3 பேரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார்கள். தன் கண்முன்னே நடந்த இந்த கோர சம்பவத்தை பார்த்து பிரேமா துடிதுடித்து கதறி அழுதார். இதைப்பார்த்த அப்பகுதி மக்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் அவர்கள் இதுபற்றி தீயணைப்பு துறையினருக்கும், உனசகி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் தீயணைப்பு படையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் காரை மீட்டனர். பின்னர் காருக்குள் சிக்கி பலியான பவன், சரணகவுடா, ஜானகி ஆகிய 3 பேரின் உடல்களையும் தீயணைப்பு படையினர் மீட்டனர்.

சோகம்

அதையடுத்து பவன் உள்ளிட்ட 3 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story