போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நடிகர் அர்ஜூன் ராம்பால் காதலியிடம் விசாரணை
நடிகர் அர்ஜூன் ராம்பாலின் காதலியிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தினர்.
மும்பை,
நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தையடுத்து போதை பொருள் தடுப்பு பிரிவினர், இந்தி திரையுலகிற்கும் போதை பொருள் கும்பலுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக சுஷாந்த் சிங்கின் காதலி ரியா சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ளார்.
இதேபோல முன்னணி நடிகைகள் ஷரத்தா கபூர், சாரா அலிகான், தீபிகா படுகோனே, ரகுல் பிரீத் சிங் உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்தினர்.
வீட்டில் சோதனை
இந்தநிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சினிமா தயாரிப்பாளர் பிரோஸ் நாடிவாலாவின் வீட்டில் சோதனை நடத்திய போதை பொருள் தடுப்பு பிரிவினர் 10 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதையடுத்து தயாரிப்பாளரின் மனைவி சபீனா செய்யது அதிடியாக கைது செய்யப்பட்டார். அதன்பிறகு அதிகாரிகள் கடந்த திங்கட்கிழமை பிரபல நடிகர் அர்ஜூன் ராம்பாலின் வீட்டிலும் சோதனை நடத்தினர். மேலும் அவரது வீட்டில் இருந்து செல்போன், மடிக்கணினி போன்ற சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணை
இந்தநிலையில் நேற்று நடிகர் அர்ஜூன் ராம்பாலின் காதலி கேப்ரில்லா டிமெட்ரியாடிசுக்கு போதை பொருள் தடுப்பு பிரிவினர் சம்மன் அனுப்பினர். அதன்பேரில் அவர் மதியம் 12 மணியளவில் தென்மும்பை பல்லர்டு எஸ்டேட்டில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு வந்தார். அவரிடம் போதை பொருள் விவகாரம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். நடிகர் அர்ஜூன் ராம்பாலிடம் இன்று (வியாழக்கிழமை) அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் என கூறப்படுகிறது.
இதேபோல கடந்த மாதம் லோனவாலாவில் போதை பொருள் விவகாரம் தொடர்பாக கேப்ரில்லா டிமெட்ரியாடிசின் தம்பி அஜிசிலோஸ் டிமெட்ரியாடிசை போதை பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story