தீபாவளி பண்டிகையையொட்டி கிளாம்பாக்கத்தில் தற்காலிக பஸ்நிலையம்


தீபாவளி பண்டிகையையொட்டி கிளாம்பாக்கத்தில் தற்காலிக பஸ்நிலையம்
x
தினத்தந்தி 12 Nov 2020 4:57 AM IST (Updated: 12 Nov 2020 4:57 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகையையொட்டி கிளாம்பாக்கத்தில் தற்காலிக பஸ்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

வண்டலூர், 

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம் கோயம்பேடு புறநகர் பஸ் நிலையம், தாம்பரம் அறிஞர் அண்ணா பஸ் நிலையம் போன்ற இடங்களில் இருந்து தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. வண்டலூர் பூங்கா அருகே கிளாம்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலையோரமாக சி.எம்.டி.ஏ.வுக்கு சொந்தமான இடத்தில் புதிதாக புறநகர் பஸ் நிலையம் கட்டும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

தற்போது அந்த இடத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி தற்காலிக பஸ் நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் இந்த தற்காலிக பஸ்நிலையத்தில் நின்று செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு பணி

தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்ட இடத்தை சுற்றி உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. குடிநீர் வசதி, மொபைல் கழிப்பறை மற்றும் பயணிகள் அமருவதற்கு இருக்கைகள் போடப்பட்டுள்ளது. மேலும் தற்காலிகமாக போலீஸ் கட்டுப்பாட்டு அறை, அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் அதிகாரிகள் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தற்காலிக பஸ் நிலையத்தில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வண்டலூர் முதல் தொழுப்பேடு சுங்கச்சாவடி வரை, கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலை போன்ற இடங்களில் செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் தலைமையில் ஒரு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, 7 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 20 இன்ஸ்பெக்டர்கள் உள்பட மொத்தம் 965 போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் 24 மணி நேரமும் ஈடுபடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Next Story