தஞ்சையில், மகளுக்கு நடத்துவது போல் வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நடத்திய முதியவர் - உறவினர்கள், சீர்வரிசையுடன் பங்கேற்பு
தஞ்சையில், பெற்ற மகளுக்கு நடத்துவதுபோல் வளர்ப்பு நாய்க்கு முதியவர் வளைகாப்பு நடத்தினார். இதில் உறவினர்கள் சீர்வரிசையுடன் பங்கேற்றனர்.
தஞ்சாவூர்,
வளர்ப்பு பிராணிகளில் நாய்களுக்கு தனி மதிப்பு உண்டு. நாய்களுக்கு அறிவுத்திறனும், நல்ல மோப்பத்திறனும் உண்டு. சாதாரண நாய்கள் முதல் பல்வேறு உயர் ரக நாய்கள் என பல வகை நாய்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. போலீஸ் துறையில் குற்ற வழக்குகளில் துப்பு துலங்குவதற்கு உதவி செய்யும் வகையில் நாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. வீட்டு பாதுகாப்புக்காகவும், வேட்டைக்காகவும் என பல காரணங்களுக்காக நாய்கள் வளர்க்கப்படுகின்றன.
நாய் நன்றியுள்ள பிராணி என்பதால் பெரும்பாலானோர் தங்களது வீடுகளில் நாயை தங்களது குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக கருதி மிகவும் செல்லமாக வளர்த்து வருகிறார்கள். மிகவும் செல்லமாக வளர்க்கப்படும் நாய்களை பலர் தங்களது குழந்தைகளைபோல் பாவித்து வருகின்றனர்.
அப்படி தான் பெற்ற பிள்ளையை போல் வளர்த்த நாய்க்கு வளைகாப்பு நிகழ்ச்சியை உற்றார், உறவினர்களை அழைத்து சிறப்பாக நடத்தியுள்ளார் தஞ்சையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(வயது 75). கார் மெக்கானிக்கான இவரை நைனா அந்த பகுதி மக்கள் அழைப்பார்கள். தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை ஆபிரகாம் பண்டிதர் நகர் விரிவாக்க பகுதியில் உள்ள தென்றல் நகரில் வசித்து வருகிறார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது. ஒருவர் சிங்கப்பூரிலும், மற்றொருவர் சென்னையிலும் வசித்து வருகின்றனர். மகள்கள் இருவரும் திருமணமாகி தன்னை பிரிந்து சென்று விட்டதாலும், மனைவி உயிருடன் இல்லாததாலும் கிருஷ்ணமூர்த்தி தனியாக வசித்து வந்தார்.
இவருக்கு துணையாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ‘டாபர்மேன்’ என்ற நாய் வந்தது. நண்பர் ஒருவர், 2 மாத குட்டியாக வழங்கிய பெண் நாயை கிருஷ்ணமூர்த்தி தனது மகள்களைப்போன்று கருதி வளர்த்து வந்தார். அந்த நாய்க்கு ‘அபிராமி’ என பெயர் சூட்டினார். செல்லமாக அபி என அந்த நாயை அவர் அழைப்பது உண்டு.
தற்போது அந்த நாய்க்கு 3 வயது நிறைவடைந்து விட்டது. மிகவும் செல்லமாக வளர்த்து வந்த அந்த நாய் கருவுற்று இருப்பதை கால்நடை மருத்துவர் மூலம் கிருஷ்ணமூர்த்தி அறிந்து கொண்டார். அந்த நாய் கருவுற்று தற்போது 50 நாட்கள் ஆகி விட்டது.
நிறைமாத கர்ப்பிணிகளுக்கு 7 அல்லது 9-வது மாதத்தில் பிறந்த வீட்டு சீராக வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். அதேபோல் தனது மகள்களுக்கு வளைகாப்பு நடத்திய கிருஷ்ணமூர்த்தி, அப்படியொரு வளைகாப்பு நிகழ்ச்சியை தனது வளர்ப்பு(மகளான) நாய்க்கும் நடத்த விரும்பினார். அதன்படி பத்திரிகை அச்சடித்து வாட்ஸ்-அப் மூலம் மகள்கள், உறவினர்கள், நண்பர்களுக்கு அனுப்பி வைத்து வளைகாப்பு நிகழ்ச்சியில் அனைவரும் தவறாது பங்கேற்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். நேற்று காலை அபிராமி என்ற அந்த நாய்க்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் உறவினர்கள், நண்பர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர். வீட்டின் அருகே உள்ள பாலவிநாயகர் கோவிலில் இருந்து பழங்கள், கற்கண்டு, மஞ்சள், குங்குமம் போன்றவை தாம்பூல தட்டில் வைக்கப்பட்டு சீர்வரிசைகளை எடுத்துக்கொண்டு உறவினர்கள் வீட்டிற்கு வந்தனர்.
சீர்வரிசை ஊர்வலம் வீட்டிற்கு வந்தவுடன் நாய்க்கு பட்டுச்சேலை போர்த்தப்பட்டு, மஞ்சள் குங்குமத்தால் திலகமிட்டு வளையல் அணிந்து, பூ அணிவித்து ஆரத்தி எடுத்தனர். இப்படியாக இந்த வளைகாப்பு நிகழ்ச்சி உறவினர்கள், நண்பர்கள் பங்கேற்க இனிதாக நடந்து முடிந்தது.
இந்த வளைகாப்பு நிகழ்ச்சியை அந்த பகுதி மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்ததுடன், நாய்க்கு வளைகாப்பு நடத்திய கிருஷ்ணமூர்த்தியின் செயலுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
இது குறித்து கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, அபியை(நாய்) நான் பெற்ற மகள்களைப்போன்று வளர்த்து வருகிறேன். நான் எங்கே சென்றாலும் அபி என்னுடன் வரும். அபி, கருவுற்றதில் இருந்து 63 நாட்கள் கழித்து குட்டியை ஈன்றெடுக்கும். இன்னும் 13 நாட்களில் தாயாகப்போகிறது. நான் 13 நாய்களை வளர்த்து வந்தேன். வயதாகி விட்டதால் மற்ற நாய்களை எல்லாம் விற்று விட்டேன். புறா, சண்டைக்கோழி, லவ்பேர்ட்ஸ் என நிறைய பிராணிகளை வளர்த்தேன். தற்போது 1 ஜோடி ஆப்ரிக்கன்பேர்டு, 6 ஜோடி லவ்பேர்ட்ஸ் மட்டுமே என்னிடம் உள்ளது என்றார்.
Related Tags :
Next Story