20 சதவீதம் போனஸ் வழங்கக்கோரி சி.ஐ.டி.யூ. கூட்டுறவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - திருவாரூரில் நடந்தது


20 சதவீதம் போனஸ் வழங்கக்கோரி சி.ஐ.டி.யூ. கூட்டுறவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - திருவாரூரில் நடந்தது
x
தினத்தந்தி 11 Nov 2020 10:00 PM GMT (Updated: 12 Nov 2020 1:34 AM GMT)

20 சதவீதம் போனஸ் வழங்கிட கோரி திருவாரூரில் சி.ஐ.டி.யூ. கூட்டுறவு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருவாரூர்,

தீபாவளி முன்பணம் மற்றும் 20 சதவீதம் போனஸ் வழங்கிட வேண்டும். ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி, சேமிப்பு நிதியை வங்கியில் முதலீடு செய்ய வேண்டும். கூட்டுறவு ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வேண்டும். ரேஷன் கடைகளில் 100 சதவீதம் பொருட்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும். ரேசன் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் கூட்டுறவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தனர்.

அதன்படி நேற்று திருவாரூர் கூட்டுறவு மண்டல இணை பதிவாளர் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யூ. கூட்டுறவு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார். இதில் சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் மாலதி, மாவட்ட பொருளாளர் பாண்டியன், சங்கத்தின் மாநில இணை செயலாளர் சித்ரா, மாவட்ட பொருளாளர் செல்வராஜ், மாநிலக்குழு உறுப்பினர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Next Story