கரூரில் 7 மாதங்களுக்கு பிறகு சினிமா தியேட்டர்கள் திறந்தது சந்தோஷமாக இருக்கிறது - படம் பார்த்து விட்டு வந்த ரசிகர்கள் பேட்டி


கரூரில் 7 மாதங்களுக்கு பிறகு சினிமா தியேட்டர்கள் திறந்தது சந்தோஷமாக இருக்கிறது - படம் பார்த்து விட்டு வந்த ரசிகர்கள் பேட்டி
x
தினத்தந்தி 11 Nov 2020 10:30 PM GMT (Updated: 12 Nov 2020 2:12 AM GMT)

கரூரில் 7 மாதங்களுக்கு பிறகு சினிமா தியேட்டர்கள் திறந்தது சந்தோஷமாக இருக்கிறது என படம் பார்த்து விட்டு வந்த ரசிகர்கள் கூறினர்.

கரூர்,

கொரோனா பரவலால் தமிழ்நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 17-ந் தேதி தியேட்டர்கள் மூடப்பட்டன. சமீபத்தில் அரசு தளர்வுகளை அறிவித்து திரையரங்குகளை திறக்க அனுமதி அளித்தது. இதனால் கடந்த சில தினங்களாக தியேட்டர்களை சுத்தப்படுத்தும் பணிகள் நடந்தன. 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்கள் இயங்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது.

இதனால் இரண்டு இருக்கைகளுக்கு நடுவில் உள்ள இருக்கையில் ரிப்பன் கட்டி தடுத்து வைத்துள்ளனர். தமிழகம் முழுவதும் நேற்றுமுன்தினம் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. ஆனால் கரூரில் தியேட்டர்கள் திறக்கவில்லை. இந்நிலையில் நேற்று கரூரில் உள்ள தியேட்டர்களும் திறக்கப்பட்டன. இதனையொட்டி தியேட்டரில் வெளியாகும் படங்களின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது. தியேட்டர் முன் காட்சி நேரங்களின் பதாகை வைக்கப்பட்டிருந்தது.

வி.பி.எப். கட்டண பிரச்சினையால் புதிய படங்கள் வெளியாகவில்லை. பழைய படங்கள் மட்டுமே வெளியானது. எம்.ஜி.ஆர். நடித்த ஆயிரத்தில் ஒருவன், விஜய்-ன் பிகில், விஜய்சேதுபதியின் கருப்பன், திரெளபதி, காட்பாதர் போன்ற பழைய படங்கள் வெளியிடப்பட்டன. முககவசம் அணியாமல் வந்த ரசிகர்களுக்கு, இலவசமாக முக கவசம் வழங்கப்பட்டது.

தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல்வெப்பநிலை பரிசோதனை செய்து, சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்த பின்னரே அனுமதிக்கப்பட்டனர். 2 இருக்கைகளுக்கு இடையே ரிப்பன் கட்டி வைக்கப்பட்டு இருந்தது. பழைய டிக்கெட் கட்டணமே வசூலிக்கப்பட்டது. தியேட்டர்களில் ரசிகர்களின் கூட்டம் மிகவும் குறைவாகவே இருந்தது. ஒருசில தியேட்டர்களில் ஒற்றை இலக்க எண்களிலேயே ரசிகர்கள் வந்திருந்தனர்.

7 மாதங்களுக்கு பிறகு தியேட்டருக்கு வந்து படம் பார்க்க வந்தவர்கள் கூறியதாவது:-

கரூர் வெங்கமேட்டை சேர்ந்த கோகுலகிருஷ்ணன்:- நீண்ட நாட்களுக்கு பிறகு தியேட்டர் திறந்தது சந்தோஷமாக இருக்கிறது. நண்பர்களுடன் சேர்ந்து பொழுது போக்கு வதற்து தியேட்டர்கள் திறக்காமல் இருந்தது. அதனால் இன்று (அதாவது நேற்று) தியேட்டர் திறந்த உடனே வந்தோம். விஜய் ரசிகர் என்பதால் படத்தை தியேட்டர் திறந்த முதல்நாளே பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அது தற்போது நிறைவேறியுள்ளது. மீண்டும் பெரிய திரையில் விஜய் படம் பார்த்தது மகிழ்ச்சி அளிக்கிறது. என்றார்.

சின்னதாராபுரத்தை சேர்ந்த தண்டபாணி:- படம் பார்த்து ரொம்ப நாட்கள் ஆகிறது. இத்தனை நாட்களாக வீட்டிலேயே பொழுதைபோக் கிட்டு இருந்தேன். தியேட்டர்கள் திறந்தது மகிழ்ச்சி. தியேட்டரில் படம் பார்ப்பது சந்தோஷமாக இருந்தது.

கரூர் வெங்கமேட்டை சேர்ந்த மணிகண்டன்:- தியேட்டரில் படம் பார்த்து பல மாதங்கள் ஆகிவிட்டன. படம் பார்க்க வந்தேன். மாஸ்டர் படத்திற்காக காத்திருந்தேன். ஓ.டி.டி.யில் படம் பார்ப்பதே விட, தியேட்டரில் பெரிய திரையில் படம் பார்ப்பது பெரிய சந்தோஷம், தியேட்டரில் படம் பார்ப்பது போன்ற அனுபவம் வேறு எதிலும் கிடைக்காது. தியேட்டரில் படம் பார்ப்பதே தனி சுகம். தியேட்டரில் விசில் அடிப்பது, நண்பர்களுடன் சேர்ந்து என்ஜாய் செய்வது மிகப்பெரிய சந்தோஷம்.

கரூர் கொளந்தானூர் விக்னேஷ்வரன்:- தியேட்டர் திறக்க ரொம்ப நாட்களாக ஆவலுடன் இருந்தேன். அதனால் தியேட்டர் திறந்தவுடனே படம் பார்க்க வந்தேன். ஓ.டி.டி. யில் படம் வெளியிட்டால், பிசினஸ் மட்டுமே இருக்கும். பெரிய நடிகர்களுக்கு மாஸ் இருக்காது. கடந்த நாட்களில் வீட்டில் ஓ.டி.டி.யில் படம் பார்த்தேன். ஆனால் எனக்கு மகிழ்ச்சி இல்லை. தியேட்டரில் படம் பார்த்தேன், ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது.

Next Story