ராமநாதபுரம் அருகே பயங்கரம்: முன்னாள் ஊராட்சி துணை தலைவரை கொன்று பிணம் கிணற்றில் வீச்சு - ஒருவர் கைது-பரபரப்பு தகவல்கள்
முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவரை வெட்டிக் கொன்று பிணத்தை கிணற்றில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பனைக்குளம்,
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியன் வேதாளை ஊராட்சிக்கு உட்பட்ட குஞ்சார்வலசை கிராமத்தை சேர்ந்தவர் அசுபதி(வயது 48). இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு வேதாளை ஊராட்சி மன்ற துணை தலைவராகவும், அதன் பிறகு உறுப்பினராகவும் பதவியில் இருந்து வந்தார். இவருக்கு ராணி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
இவரது மனைவி 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றினார். நேற்று முன்தினம் மாலை வீட்டில் அசுபதி மதிய உணவு சாப்பிட்டு விட்டு வெளியே சென்று வருவதாக மனைவியிடம் கூறி சென்றார். நீண்டநேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. பலமுறை அவரது செல்போனில் தொடர்பு கொண்ட போதும் இணைப்பு கிடைக்கவில்லை.
இதனால் உறவினர்கள், நண்பர்களிடம் குடும்பத்தினர் தகவல் தெரிவித்து இரவு முழுவதும் பல இடங்களில் தேடியும் அசுபதியை கண்டுபிடிக்க முடியவில்லை. நேற்று காலை குஞ்சார்வலசை அருகில் உள்ள தென்னந்தோப்பு உள்ளிட்ட இடங்களில் தேடிப்பார்ப்பதற்காக அசுபதியின் மனைவி சென்றார். அப்போது, ஒரு கிணற்றில் அவர் அணிந்திருந்த சட்டை மிதப்பதை கண்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ராணி, கணவர் கிணற்றுக்குள் விழுந்து கிடக்கலாமோ என்ற சந்தேகத்தில் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து விரைந்து வந்த உறவினர்கள் அந்த பகுதியில் தேடிய போது பல இடங்களில் கிணற்றை சுற்றி ரத்தம் உறைந்து கிடப்பதை கண்டு மண்டபம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக், துணை சூப்பிரண்டு வெள்ளத்துரை, பயிற்சி துணை சூப்பிரண்டு ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் மண்டபம் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் கிணற்றின் உள்ளே இறங்கி தேடியபோது வெட்டுக்காயங்களுடன் அசுபதியின் பிணம் மீட்கப்பட்டது. தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை பதிவு செய்தனர். மோப்ப நாய் ரோமியோவும் கிணற்று பகுதியை சுற்றி ஓடியது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. பின்னர் போலீசார் அசுபதியின் உடலை பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அசுபதியை வெட்டிக்கொன்று பிணத்தை கிணற்றில் வீசி இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
இந்த கொலை தொடர்பாக குஞ்சார்வலசையை சேர்ந்த நம்புராஜன்(39), அதே ஊரை சேர்ந்த சண்டியர் என்ற முனித்துரை(32), குணசேகரன் மனைவி முருகம்மாள்(55) ஆகிய 3 பேர் மீது மண்டபம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முனித்துரையை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story