ராமநாதபுரத்தில், தொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது; 22 பவுன் மீட்பு


ராமநாதபுரத்தில், தொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது; 22 பவுன் மீட்பு
x
தினத்தந்தி 12 Nov 2020 3:45 AM IST (Updated: 12 Nov 2020 9:45 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் தொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 22 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மஞ்சன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் லோகநாதன்(வயது 39). இவரது மனைவி ஜானகி. இவர்கள் கடந்த மாதம் 25-ந் தேதி கூலி வேலைக்கு சென்ற நிலையில் வீட்டில் மகள்கள் ஜனாஸ்ரீ(17), சாதனாஸ்ரீ(15), மகன் சரவணன்(12) ஆகியோர் ஆன்லைனில் படித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 4 பேர் வாள் கத்தியால் மிரட்டி செல்போன்களை பறித்துக்கொண்டு நகைகளை கழற்றி தரும்படி மிரட்டினர். குழந்தைகள் கத்தி கூச்சலிட்டதால் அக்கம்பக்கத்தினர் வந்ததும் 4 பேரும் தப்பி சென்றுவிட்டனர்.

இதுபற்றி போலீசார் வழக்குபதிவு செய்து ராமநாதபுரம் நேருநகர் ரஞ்சித்குமார்(26), சின்னக்கடை அறிவுமணி(22), பட்டணம்காத்தான் விவேகானந்தர் தெரு கிஷோர்(20), சேதுபதிநகர் லைசன்(20) ஆகிய 4 பேரை கைது செய்தனர். பின்னர் இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் ரஞ்சித்குமார், அறிவுமணி ஆகியோர் மீது திருட்டு, நகை பறிப்பு, வழிப்பறி உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளது. குறிப்பாக ராமநாதபுரம், தேவிபட்டினம், மண்டபம், சத்திரக்குடி உள்ளிட்ட பகுதிகளில் நகை பறிப்பில் ஈடுபட்டதும், பல இடங்களில் வீடுபுகுந்து நகைகளை திருடிச்சென்றதும், நடந்து செல்பவர்களிடம் செல்போன் பறித்து சென்றதும் தெரிந்தது.

இதைதொடர்ந்து இருவரையும் ராமநாதபுரம் கோர்ட்டு அனுமதியுடன் கேணிக்கரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணையில் இவர்கள் 2 பேரும், மற்றொரு கூட்டாளியுடன் சேர்ந்து ராமநாதபுரம் உள்ளிட்ட பல இடங்களில் தொடர் திருட்டு மற்றும் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.

இவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு, சப்-இன்ஸ்பெக்டர் குகனேஸ்வரன் ஆகியோர் 22 பவுன் நகைகளை மீட்டனர்.

பின்னர் இருவரையும் ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி வரும் 24-ந் தேதி வரை இருவரையும் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் போலீசார் மற்றொரு கூட்டாளியை தேடிவருகின்றனர்.

Next Story