தொடர் மின்தடையால் அவதி: மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் கிராம மக்கள் திடீர் மறியல் - போக்குவரத்து பாதிப்பு
காளையார்கோவில் அருகே பல நாட்களாக மின் வினியோகம் இல்லாததை கண்டித்து கிராம மக்கள் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
காளையார்கோவில்,
காளையார்கோவில் அருகே உள்ள மறவமங்கலம் துணை மின்நிலையத்தில் இருந்து மறவமங்கலம், ஏரிவயல், சூராணம், வலையம்பட்டி, குண்டாக்குடை, சிலுக்கப்பட்டி, பெரியகண்ணனூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்வினியோகம் செய்யப்படுகிறது. மறவமங்கலம் துணை மின்நிலையத்தில் ஒரே மின்மாற்றி(டிரான்ஸ்பார்மர்) மட்டுமே உள்ளதால் அனைத்து பகுதிகளுக்கும் சீரான மின்சாரம் அளிக்க முடியவில்லை. இதனால் அடிக்கடி மின்தடை ஏற்படுவதோடு, குறைந்த அழுத்த மின்சாரமே வினியோகிக்கப்படுகிறது.
இந்த நிலையில் பெரியகண்ணனூர் பகுதியில் ஒரு வாரத்திற்கு மேலாக மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகளில் மின் உபயோக பொருட்களை பயன்படுத்த முடியவில்லை. பம்புசெட் மோட்டார்களை இயக்க முடியாமல் பயிர்கள் காய்ந்து வருகின்றன. தெருவிளக்குகள் எரியாததால் இரவு நேரங்களில் நடமாட முடியவில்லை.
இதுகுறித்து மறவமங்கலம் துணை மின்நிலையத்தில் கிராம மக்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பெரியகண்ணனூர் கிராம மக்கள் நேற்று காளையார்கோவில் துணை மின்நிலையம் முன்பு மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் திடீரென்று மறியலில் ஈடுபட்டனர். மேலும் தங்களது பகுதியை மறவமங்கலம் துணை மின்நிலையத்தில் இருந்து பிரித்து காளையார்கோவில் துணை மின்நிலையத்துடன் இணைக்க வேண்டும், சீரான மின்வினியோகம் வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பினர். மின்வாரிய அதிகாரிகள், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story