அ.தி.மு.க. அரசு மீதான “மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுகளை மக்கள் ஏற்க மாட்டார்கள்” - ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேச்சு


அ.தி.மு.க. அரசு மீதான “மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுகளை மக்கள் ஏற்க மாட்டார்கள்” - ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேச்சு
x
தினத்தந்தி 12 Nov 2020 10:30 AM IST (Updated: 12 Nov 2020 10:27 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. அரசு மீதான மு.க.ஸ்டாலினின் பொய்யான குற்றச்சாட்டுகளை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறினார்.

திருப்பரங்குன்றம்,

மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பசுமலையில் தேர்தல் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ், மாவட்ட துணைச் செயலாளர் முத்துக்குமார், ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், பகுதி துணை செயலாளர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

வட்டச் செயலாளர் பொன்முருகன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மதுரை மாவட்ட தி.மு.க. கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக பேசும்போது கூறிய குற்றச்சாட்டுகள் மக்கள் ஏற்றுக்கொள்ள முடியாததாக உள்ளது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பல்வேறு நடைமுறைகளை பின்பற்றி தற்போது ரூ.5 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளது. விரைவில் கட்டுமான பணி தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளில் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும். ஆனால் எய்ம்ஸ் அமைப்பதற்கான தடயமே இல்லை என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ள பொய்யான குற்றச்சாட்டை மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

மு.க.ஸ்டாலின் அதிக நேரம் பசும்பொன் முத்துராமலிங்க தேவரை பற்றியே பேசியுள்ளார். அதற்கு என்ன காரணம்? தேவர் ஜெயந்தி அன்று பசும்பொன்னில் என்ன நடந்தது என்பது மக்களுக்கு தெரியும். அதை மறைக்க நாடகம் ஆடுவதும் மக்களுக்கு தெரியும்.

தி.மு.க. ஆட்சி காலத்தில் மக்களுக்கு பயன்படக்கூடிய திட்டங்கள் எதையும் கொண்டு வரவில்லை. திட்டங்கள் கொண்டு வந்தது போல மாய தோற்றத்தை உருவாக்கி அதன் மூலம் அரசுப் பணத்தை வீணடித்து உள்ளனர். ஆகவே தி.மு.க. ஆட்சிக்காலத்தில் மக்களுக்கு நன்மை இல்லை. கேடு தான் விளைந்தது.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story