மயிலம் அருகே, வழிப்பறியில் ஈடுபட்ட 5 கொள்ளையர்கள் கைது
மயிலம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 5 கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்.
மயிலம்,
மயிலம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கன்னிகாபுரம் மற்றும் விளங்கம்பாடி ஆகிய இடங்களில் உள்ள பஸ் நிறுத்ததில் கடந்த 6-ந் தேதி இரவு பஸ்சுக்காக காத்திருந்த காஞ்சிபுரம் மாவட்டம் மறைமலை நகரை சேர்ந்த முருகன் மகன் கவுதம்(வயது 33), திருவண்ணாமலை மாவட்டம் சென்னி மங்கலத்தை சேர்ந்த சுபான் மகன் யூசுப்(29) ஆகியோரிடம் மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி, இரும்பு கம்பியால் தாக்கி, அவர்களிடம் இருந்த பணம், செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறித்து சென்றனர்.
இது குறித்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் வழிப்பறி கொள்ளையர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்பாபு, பாபு ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நேற்று மாலை விழுப்புரம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது செண்டூர் பஸ் நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த 5 பேர், போலீசாரை கண்டதும் ஓடினர். உடனே போலீசார் துரத்திச்சென்று பிடித்து விசாரித்ததில் அவர்கள், சக்திவேல் மகன் ஆனந்த்(20), மணிகண்டன் மகன் அசோக்குமார், சக்கரவர்த்தி மகன் வீராசாமி(20), தங்கதுரை மகன் புவனேஷ் குமார்(23), 17 வயது சிறுவன் ஆகியோர் என்பதும், கன்னிகாபுரம், விளங்கம்பாடி ஆகிய இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 3 மோட்டார் சைக்கிள்கள், செல்போன், கத்தி, இரும்பு கம்பி உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 5 பேர் மீது கொடுங்காலூர், வந்தவாசி, அணகாவூர், செங்கல்பட்டு, துரைப்பாக்கம், வெள்ளிமேடுபேட்டை ஆகிய இடங்களில் ஏற்கனவே கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story