கம்பம் வனப்பகுதியில் மோப்ப நாய் உதவியுடன் ரூ.50 லட்சம் கஞ்சா செடிகள் அழிப்பு
கம்பம் வனப்பகுதியில், மோப்ப நாய் உதவியுடன் ரூ.50 லட்சம் கஞ்சா செடிகள் அழிக்கப்பட்டன.
கம்பம்,
தமிழக-கேரள எல்லையில் தேனி மாவட்டம் கம்பம் அமைந்துள்ளது. இங்கு கஞ்சாவை பதுக்கி வைத்து, கேரள மாநிலத்துக்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதனை தடுக்கும் வகையில், தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கஞ்சா தடுப்பு நடவடிக்கையில் மோப்பநாய் வெற்றி ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கடந்த ஒரு மாதமாக கம்பம் வாரச்சந்தை, உத்தமபுரம், புதுக்குளம், ஏகலூத்து, கம்பம்மெட்டு மலை அடிவாரம் உள்ளிட்ட இடங்களில் தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே கம்பம் மணிகட்டி ஆலமரம் மேற்கே உள்ள வனப்பகுதியில் கஞ்சா பயிரிட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிலைமணி, சப்-இன்ஸ்பெக்டர் திவான்மைதீன் மற்றும் போலீசார் அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மேலும் 2 வயதான மோப்பநாய் வெற்றியும் வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.
வனப்பகுதியில் உள்ள முட்புதருக்குள் மோப்பநாய் வெற்றி திடீரென புகுந்தது. ஆனால் போலீசாரால் உள்ளே செல்ல முடியவில்லை. இதனையடுத்து முட்செடிகளை அகற்றி விட்டு, போலீசார் உள்ளே சென்று பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர்.
அதாவது, அங்கு கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டு தோட்டம் போல வளர்த்து வருவது தெரியவந்தது. பச்சைப்பசேல் என்று ஆளுயரத்தில் கஞ்சா செடிகள் செழித்து வளர்ந்திருந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்த உத்தமபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு சின்னகண்ணு, கம்பம் மேற்கு வனச்சரகர் அன்பு, உத்தமபுரம் கிராம நிர்வாக அலுவலர் நசீம்கான் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் அவர்கள் முன்னிலையில் கஞ்சா செடிகள் அழிக்கப்பட்டன. அங்கு பயிரிட்டிருந்த 500 கிலோ கஞ்சா செடிகள் வேரோடு அகற்றப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டன. இதன் மதிப்பு ரூ.50 லட்சம் இருக்கும் என்று கருதப்படுகிறது.
இதுதொடர்பாக உத்தமபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு சின்னகண்ணு கூறுகையில், கம்பம் வனப்பகுதியில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்கும் பணியில் மோப்பநாய் வெற்றி ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. அதன் உதவியுடன், வனப்பகுதியில் பயிரிட்டிருந்த கஞ்சா செடிகளை அகற்றி அழித்திருக்கிறோம். அந்த நிலம் யாருக்கு சொந்தமானது என்றும், கஞ்சா செடிகளை பயிரிட்டது யார்? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.
Related Tags :
Next Story