சேந்தமங்கலம் அருகே குடிநீர் கசிவால் சேதமாகும் தார்சாலை


சேந்தமங்கலம் அருகே குடிநீர் கசிவால் சேதமாகும் தார்சாலை
x
தினத்தந்தி 12 Nov 2020 9:15 PM IST (Updated: 12 Nov 2020 9:15 PM IST)
t-max-icont-min-icon

சேந்தமங்கலம் அருகே குடிநீர் கசிவால் தார்சாலை சேதமடைந்து வருகிறது. எனவே விரைவில் குடிநீர் கசிவை சரி செய்து, அந்த பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேந்தமங்கலம், 

கொல்லிமலை அடிவாரத்தில் வரட்டாறு ஓடுகிறது. இந்த ஆற்றின் மையப்பகுதியில் இருந்து 3 திறந்தவெளி கிணறுகள் அமைக்கப்பட்டு தண்ணீர் எடுக்கப்பட்டு அதன்மூலம் சேர்ந்தமங்கலம் பேரூராட்சிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஆற்றில் இருந்து சேந்தமங்கலம் பேரூராட்சி பகுதி சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

வெண்டாங்கி கிராமத்தில் இருந்து ராமநாதபுரம் புதூர் செல்லும் வழியில் மூன்று சாலை பிரிவு உள்ளது. அங்கு சேந்தமங்கலம் பேரூராட்சிக்கு வரும் பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் கடந்த சில மாதங்களாகவே குடிநீர் கசிந்து வீணாகி வருகிறது. தண்ணீர் கசிவால் அங்கு போடப்பட்ட தார் சாலை நாளுக்கு நாள் சேதமாகி வருகிறது.

தற்போது அங்கு சுமார் 2 அடி வரை சாலையில் ஒரு பள்ளமே தோன்றி உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் தடுமாறியபடி சென்று வருகிறது. மேலும் இரவு நேரத்தில் இந்த பாதையில் வரும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

அந்த பகுதியில் வேகமாக செல்லும் வாகன ஒட்டிகள் விபத்துக்குள்ளாகும் அபாயமும் உள்ளது. எனவே விரைவில் குடிநீர் கசிவை சரி செய்து, சாலையில் உள்ள அந்த பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story