பெத்தநாயக்கன்பாளையம் அருகே கோவில் பூட்டை உடைத்து சாமி சிலை திருடிய 3 பேர் கைது - ரூ.3 லட்சம் மதிப்பிலான சிலை மீட்பு


பெத்தநாயக்கன்பாளையம் அருகே கோவில் பூட்டை உடைத்து சாமி சிலை திருடிய 3 பேர் கைது - ரூ.3 லட்சம் மதிப்பிலான சிலை மீட்பு
x
தினத்தந்தி 12 Nov 2020 10:00 PM IST (Updated: 12 Nov 2020 10:00 PM IST)
t-max-icont-min-icon

பெத்தநாயக்கன்பாளையம் அருகே கோவில் பூட்டை உடைத்து சாமி சிலையை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான சிலை மீட்கப்பட்டது.

பெத்தநாயக்கன்பாளையம், 

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் தாலுகாவுக்கு உட்பட்ட கல்லேரிப்பட்டியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த கோவில் பூட்டை உடைத்து சாமி சிலை திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

குறிப்பாக மாரியம்மன் சிலை, மாரியம்மன் வெள்ளி முக கவசம், வெள்ளி வேல், வெண்கல கவசம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்று இருந்தனர். இந்த சிலை திருட்டு தொடர்பாக ஏத்தாப்பூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சதீஷ்குமார், உதயகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சிலை திருடர்கள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் ஏத்தாப்பூர் பகுதியைச் சேர்ந்த ராகவன் (வயது 22), செந்தில் குமார் (35), கல்லேரிப்பட்டி பகுதியைச் சேர்ந்த முனிராஜ் (38) ஆகிய 3 பேர் கோவிலிலுள்ள சிலையை திருடி அதனை ரகசியமாக விற்பனை செய்ய முடிவு செய்தது தெரியவந்தது.

மேலும் அவர்கள் கோவிலின் பூட்டை உடைத்து சிலை, வெள்ளி முக கவசம், வெண்கல கவசம், வெள்ளி வேல் ஆகியவற்றை இரவோடு, இரவாக திருடிச்சென்று பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து கோவில் சிலை மற்றும் வெள்ளி முக கவசம், வெள்ளி வேல், வெண்கல கவசத்தை மீட்டனர்.

பின்னர் அவர்கள் 3 பேரும் ஆத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஓமலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட அம்மன் சிலை மற்றும் பொருட்களின் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

Next Story