சிரஞ்சீவி சர்ஜாவின் குழந்தைக்கு தொட்டில் சாஸ்திரம் விழா சிருவை நான் என் மகன் வடிவில் காண்கிறேன் நடிகை மேக்னா ராஜ் உருக்கம்


சிரஞ்சீவி சர்ஜாவின் குழந்தைக்கு தொட்டில் சாஸ்திரம் விழா சிருவை நான் என் மகன் வடிவில் காண்கிறேன் நடிகை மேக்னா ராஜ் உருக்கம்
x
தினத்தந்தி 13 Nov 2020 1:44 AM IST (Updated: 13 Nov 2020 1:44 AM IST)
t-max-icont-min-icon

மறைந்த நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் குழந்தைக்கு தொட்டில் சாஸ்திரம் விழா நேற்று நடந்தது. விழாவின்போது தனது மகன் வடிவில் தன்னுடைய கணவர் சிரஞ்சீவி சர்ஜாவை காண்பதாக நடிகை மேக்னா ராஜ் உருக்கமாக கூறினார்.

பெங்களூரு, 

கன்னட திரை உலகில் பிரபல நடிகராக இருந்து வந்தவர் சிரஞ்சீவி சர்ஜா(வயது 39). இவர், தமிழ் திரை உலகில் பிரபல நடிகராக இருந்து வரும் அர்ஜூனின் நெருங்கிய உறவினர் ஆவார். சிரஞ்சீவி சர்ஜாவின் மனைவி மேக்னா ராஜ். இவரும் பிரபல நடிகை ஆவார். சிரஞ்சீவி சர்ஜாவும், மேக்னா ராஜும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நட்சத்திர ஜோடி ஆவார்கள்.

திருமணத்திற்கு பிறகு பெங்களூருவில் வசித்து வந்த சிரஞ்சீவி சர்ஜாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிரஞ்சீவி சர்ஜா திடீரென மரணம் அடைந்தார். அவரது மரணம் கன்னட திரை உலகை உலுக்கியது. சிரஞ்சீவி சர்ஜா மரணம் அடைந்தபோது மேக்னா ராஜ் கர்ப்பமாக இருந்தார்.

வெள்ளி தொட்டில்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேக்னா ராஜுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை பிறக்கும் முன்பே அதற்கு தேவையான பொருட்களை சிரஞ்சீவி சர்ஜாவின் தம்பியும், பிரபல நடிகருமான துருவ் சர்ஜா வாங்கி வைத்திருந்தார். அதில் ரூ.10 லட்சம் மதிப்பிலான வெள்ளி தொட்டிலும் அடங்கும். குழந்தை பிறந்த பின்பும் அதை வெளி உலகிற்கு மேக்னா ராஜும், சிரஞ்சீவி சர்ஜாவின் குடும்பத்தினரும் காட்டவில்லை.

இந்த நிலையில் நேற்று பெங்களூருவில் சிரஞ்சீவி சர்ஜாவின் வீட்டில் அவரது குடும்ப வழக்கப்படி “தொட்டில் சாஸ்திரம்“ எனப்படும் குழந்தையை தொட்டிலில் போடும் விழா நடந்தது.

கொரோனா பரவல்

கொரோனா பரவல் காரணமாக இந்த விழாவில் சிரஞ்சீவி சர்ஜாவின் குடும்பத்தினர் மற்றும் மேக்னா ராஜின் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர். விழாவில் சிரஞ்சீவி சர்ஜாவின் குழந்தையை அவரது குடும்பத்தினரும், மேக்னா ராஜின் குடும்பத்தினரும் சேர்ந்து தொட்டிலில் போட்டு தாலாட்டினர். விழா முடிந்ததும் நடிகை மேக்னா ராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

என் குழந்தைதான் எனது சக்தி. சிரு(சிரஞ்சீவி சர்ஜா) என் கையில் கொடுத்த பொக்கிஷம் தான் எனது மகன். என் மகன் வடிவில் நான் மறைந்த என் கணவர் சிருவை பார்க்கிறேன்.

நான் தைரியமானவள் இல்லை

கஷ்ட காலங்களை எதிர்கொள்வது எப்படி என்பதை நான் சிருவிடம் இருந்துதான் கற்றுக்கொண்டேன். மகன் பிறந்தது எனக்கு இரட்டை சந்தோஷம். சிரு இறந்த பின்பு மனவருத்தத்தில் வேதனையுடன் இருந்த நான் மகன் பிறந்ததால் சற்று அதில் இருந்து மீண்டுள்ளேன். சிரு இறந்துவிட்டாலும் நான் அவருடைய நினைவிலேயே வாழ்ந்து வந்தேன். இன்று(நேற்று) எனது மகனுக்கு தொட்டில் சாஸ்திரம் கொண்டாடப்பட்டது.

எனது மகன் மூலம் நான் சிருவை காண்பேன் என்று சிந்திக்கவில்லை. என் வேதனைகளை என் மகனின் முகம் மறக்கச் செய்கிறது. நான் மிகவும் தைரியமானவள் என்று பலரும் கூறுகிறார்கள். நான் தைரியமானவள் இல்லை. என்னால் வேதனைகளை தாங்க முடியாது.

இவ்வாறு நடிகை மேக்னா ராஜ் கூறினார். 

Next Story