கடையம் அருகே இன்று திருமணம் நிச்சயிக்க இருந்த நிலையில் இளம்பெண் தற்கொலை


கடையம் அருகே இன்று திருமணம் நிச்சயிக்க இருந்த நிலையில் இளம்பெண் தற்கொலை
x
தினத்தந்தி 13 Nov 2020 5:32 AM IST (Updated: 13 Nov 2020 5:32 AM IST)
t-max-icont-min-icon

கடையம் அருகே இன்று (வெள்ளிக்கிழமை) திருமணம் நிச்சயிக்க இருந்த நிலையில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை போலீசுக்கு தெரியாமல் புதைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடையம், 

தென்காசி மாவட்டம் கடையம் அருகே காளத்திமடம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். விவசாயி. இவருடைய மகள் செல்வ புனிதா (வயது 27). இவர் எம்.ஏ. படித்துள்ளார். இவருக்கு இன்று (வெள்ளிக்கிழமை) திருமண நிச்சயதார்த்தம் நடத்த பெற்றோர் ஏற்பாடு செய்தனர்.

இந்த நிலையில் நேற்று காலையில் செல்வ புனிதா வீட்டில் திடீரென்று மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உடல் அடக்கம்

பின்னர் வீட்டுக்கு வந்த பெற்றோர் தங்களுடைய மகள் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். இந்த நிலையில் செல்வ புனிதா தற்கொலை செய்ததை போலீசாருக்கு தெரிவிக்காமல், அவரது உடலை குடும்பத்தினர் அடக்கம் செய்தனர்.

இதுகுறித்து அறிந்த குத்தபாஞ்சான் கிராம நிர்வாக அலுவலர் சேரன் பாண்டியன், கடையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இன்று உடல் தோண்டி எடுப்பு

தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) ஆலங்குளம் தாசில்தார் முன்னிலையில், செல்வ புனிதாவின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story