விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
தீ விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து பொதுமக்களிடம் பெரம்பலூர் தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பெரம்பலூர்,
தீபாவளி பண்டிகை நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்படவுள்ளது. தீபாவளி பண்டிகையன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்து மகிழ்வார்கள். அப்போது தீ விபத்து ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் இயக்குனர் ஜாபர் சேட் உத்தரவின்பேரில், திருச்சி மத்திய மண்டல துணை இயக்குனர் மீனாட்சி விஜயகுமார் வழிக்காட்டுதலின்படி, பெரம்பலூர்-அரியலூர் ஒருங்கிணைந்த மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா தலைமையில் பெரம்பலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் நேற்று ஊர்வலமாக வந்து பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் தீ விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் தீயணைப்பு வீரர்கள் கிறிஸ்துமஸ் தாத்தா, கோமாளி உள்ளிட்ட மாறுவேடங்கள் அணிந்து வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது தீயணைப்பு வீரர்கள் பொதுமக்களிடம் கூறியதாவது:-
குழந்தைகள் பட்டாசு வெடிக்கும்போது இறுக்கமான பருத்தி ஆடையினை அணிய வேண்டும். தளர்வான ஆடைகளை அணியக்கூடாது. பெரியவர்கள் மேற்பார்வையில் குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்க செய்ய வேண்டும். நீண்ட வத்திகளை கொண்டு பட்டாசுகளை வெடிக்க செய்ய வேண்டும். பட்டாசு வெடிக்கும் போது காலணிகள் அணிந்து கொள்ள வேண்டும், வாளி நிறைய தண்ணீரை அருகில் வைத்திருக்க வேண்டும். பட்டாசுகளை வீட்டிற்கு வெளியே திறந்த மைதானத்தில் வைத்து வெடிக்க செய்ய வேண்டும்.
தீக்காயம் ஏற்பட்டால் குளிர்ந்த நீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பட்டாசுகளை குழந்தைகள் நின்ற நிலையில் வெடிக்க செய்ய வேண்டும். கம்பி மத்தாப்புகளை பயன்படுத்தியபின் நீர் நிரம்பிய வாளியில் போட வேண்டும். வெடிக்காத பட்டாசுகள் மீது குளிர்ந்த நீரை ஊற்ற வேண்டும்.
ஈரமான பட்டாசுகளை சூரிய வெளிச்சத்தில் வைத்து உலர வைக்க வேண்டும். குறைந்த ஓசை (120 டெசிபெல்) கொண்ட பட்டாசுகளை வெடிக்க செய்ய வேண்டும். பட்டாசுகளை பள்ளி, கல்லூரிகள் மற்றும் மருத்துவமனை அருகே வெடிக்க செய்யக்கூடாது. சட்டைப்பையில் பட்டாசுகளை வைத்திருக்கக்கூடாது. பட்டாசுகளை கண்ணாடி பாட்டிலில் மற்றும் டின் பாட்டிலில் வைத்து வெடிக்க செய்யக்கூடாது. தீக்காயத்திற்கு மை, வாழைச்சாறு, கிரீஸ், எண்ணெய் போன்ற எவ்விதமான திரவங்களையும் பயன்படுத்தக்கூடாது. ஈரமான பட்டாசுகளை எரிவாயு அடுப்பு மற்றும் விறகு அடுப்பு அருகே உலர வைக்கக்கூடாது.
பட்டாசுகளை கையில் பிடித்து வெடிக்கக்கூடாது. விலங்குகளை துன்புறுத்தும் வகையில் பட்டாசுகளை வெடிக்க செய்யக்கூடாது. அரசு நிர்ணயம் செய்த நேரத்திற்கு பிறகு பட்டாசுகளை வெடிக்கக்கூடாது, என்றனர். மேலும் இது தொடர்பான துண்டு பிரசுரங்களை தீயணைப்பு வீரர்கள் வழங்கி வருகின்றனர். இதில் மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலர் தாமோதரன், பெரம்பலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சத்தியவர்த்தணன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர்.
தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்பு நிலையத்துக்கு தெரிவிக்க தொலைபேசி எண்கள் வருமாறு:-
பெரம்பலூர் பகுதி மக்கள் 9445086441, 04328-224255, 224101, வேப்பூர் பகுதி மக்கள் 9445086446, 04328-266400, 266101, அரியலூர் பகுதி மக்கள் 9445086442, 04329-222100, 222101, ஜெயங்கொண்டம் பகுதி மக்கள் 9445086443, 04331-250359, 250101, செந்துறை பகுதி மக்கள் 9445086444, 04329-242399, 242101.
இந்த தகவல் பெரம்பலூர்-அரியலூர் ஒருங்கிணைந்த மாவட்ட தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story