ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டு விழா: வேகமெடுக்கும் காவிரி-வைகை- குண்டாறு இணைப்பு திட்டப்பணி - கலெக்டர் தலைமையில் ஆலோசனை
காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு வருகிற ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட உள்ளதால், இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமையில் நேற்று நடைபெற்றது.
புதுக்கோட்டை,
விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையான காவிரி-வைகை- குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றும் வகையில் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களும் பயன்பெற உள்ளது.
இந்த திட்டத்திற்காக தமிழக அரசு ரூ.700 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதுக்கோட்டைக்கு கடந்த மாதம் 22-ந் தேதி வருகை தந்திருந்தார். அப்போது இந்த திட்டத்திற்கு வருகிற ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டப்படும் எனவும், நானே நேரில் புதுக்கோட்டைக்கு வந்து அடிக்கல் நாட்டுவேன் என்றார். இதற்காக, 100 பொக்லைன் எந்திரங்கள் மூலம் புதிய கால்வாய் வெட்டப்பட்டு, காவிரி ஆற்றின் தண்ணீர் புதுக்கோட்டை மாவட்டத்தில் பாய்ந்தோடி கடந்து செல்ல உள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் பேசி வருகிறார். இந்த திட்டப்பணிகள் தற்போது வேகமெடுக்க தொடங்கி உள்ளது. இதற்காக புதுக்கோட்டை மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கி நடந்து வருகிறது.
இந்த திட்டப்பணிக்கு ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளதால், இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் ரம்யாதேவி, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் (நீர்வள ஆதாரம்) உமாசங்கர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், இத்திட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இத்திட்ட பணிகள் குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த பொதுப்பணித்துறையில் தனியாக கோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கோட்டத்தின் தலைமை அலுவலகம் கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ளது. இதேபோல இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ள மாவட்டங்களிலும் கிளை அலுவலகம் தொடங்கப்பட்டு உதவி பொறியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்தந்த மாவட்டங்களில் நிலங்களை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளதால் அரசு மற்றும் புறம்போக்கு நிலம் தவிர விவசாய நிலங்களை கையகப்படுத்த பணியில் உத்வேகம் காட்டப்பட்டுள்ளது. இதற்காக இத்திட்டம் குறித்து விவசாயிகளிடம் எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு ஜனவரி மாதம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்“ என்றார்.
Related Tags :
Next Story