பிரதோஷத்தையொட்டி சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்


பிரதோஷத்தையொட்டி சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்
x
தினத்தந்தி 13 Nov 2020 3:15 AM IST (Updated: 13 Nov 2020 9:48 AM IST)
t-max-icont-min-icon

சதுரகிரியில் பிரதோஷத்தையொட்டி திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

வத்திராயிருப்பு,

வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பிரதோஷத்தையொட்டி நேற்று, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்தனர். நேற்று அதிகாலையில் பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு குவிந்தனர். இதையடுத்து வனத்துறை கேட் காலை 7 மணிக்கு திறக்கப்பட்டு பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. பக்தர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே மலைப்பாதை வழியாக சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

பக்தர்களின் பாதுகாப்பிற்காக நீர்வரத்து ஓடைகளில் வனத்துறையினர், தீயணைப்புத்துறையினர், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஐப்பசி மாதம் பிரதோஷத்தையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கும் சந்தனமகாலிங்கம் சுவாமிக்கும் பால், பழம், பன்னீர், சந்தனம், இளநீர் போன்ற பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் சுந்தரமகாலிங்கம் சுவாமி, சந்தன மகாலிங்க சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். பக்தர்களுக்கு தேவையான உணவு உள்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் விஸ்வநாத் விஸ்வநாதன் செய்திருந்தார்.

Next Story