கள்ளக்குறிச்சி-சின்னசேலம் இடையே புதிய அகல ரெயில்பாதை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை - கலெக்டர் கிரண்குராலா தகவல்
கள்ளக்குறிச்சி-சின்னசேலம் இடையே புதிதாக அகல ரெயில்பாதை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கலெக்டர் கிரண்குராலா தெரிவித்தார். கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் கிரண்குராலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சின்னசேலம் முதல் கள்ளக்குறிச்சி வரை புதிதாக அகல ரெயில்பாதை அமைக்கும் திட்டப்பணிகளை தொடங்குவதற்கு தமிழக அரசால் கடந்த 2016-ம் ஆண்டு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது.
அதன்படி இந்த திட்டத்தில் சின்னசேலம் தாலுகாவில் 2 கிராமங்களும், கள்ளக்குறிச்சி தாலுகாவில் 9 கிராமங்களும் என மொத்தம் 11 கிராமங்கள் உள்ளடங்கும். இந்த திட்டத்திற்கு தேவையான நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வந்தது. பின்னர் கடந்த 2019 ஜூலை மாதம் சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் படி நிலம் கையகப்படுத்தும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.
பின்னர் கடந்த டிசம்பர் 2019-ல் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் தற்போது நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 11 கிராமங்களில் சின்னசேலம்(வடக்கு), பொற்படாக்குறிச்சி, கீழ்பூண்டி, வினைத்தீர்த்தாபுரம், கனியாமூர் ஆகிய 5 கிராமங்களில் மொத்தம் 14.81 ஹெக்டேர்(36.58 ஏக்கர்) நிலம் கையகப்படுத்தப்பட்டு நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது.
இதில் சின்னசேலம் (வடக்கு) கிராமத்தில் ரெயில்வே துறையினரால் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. மீதமுள்ள கிராமங்களில் நிலம் கையகப்படுத்தும் பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட நிர்வாகத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தில் ரெயில் பாதையில் ரெயில்வே துறையினரால் 2 பெரிய பாலங்கள் மற்றும் 23 சிறிய பாலங்கள் கட்டுவதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் மூலம் கள்ளக்குறிச்சி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சின்னசேலம்- கள்ளக்குறிச்சி இடையே புதிய அகல ரெயில்பாதை திட்ட பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story