தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடைவீதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடைவீதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்
x
தினத்தந்தி 13 Nov 2020 4:23 PM IST (Updated: 13 Nov 2020 4:23 PM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கொரோனா அச்சமின்றி கடைவீதிகளில் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் மக்கள் குவிந்தனர்.

தேனி, 

தீபாவளி பண்டிகை நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகை என்றாலே புத்தாடை, பட்டாசு, பலகாரங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. புத்தாடை வாங்கவும், பட்டாசு, பலகாரங்கள் வாங்கவும் கடைவீதிகளில் கடந்த 2 நாட்களாக மக்கள் குவிந்து வருகின்றனர்.

அதற்கு ஏற்ப தேனி நகரில் முக்கிய சாலைகளான கம்பம் சாலை, மதுரை சாலை, பெரியகுளம் சாலை ஆகிய சாலைகளிலும், எடமால் தெரு, பகவதியம்மன் கோவில் தெரு ஆகிய கடைவீதிகளிலும் நூற்றுக்கணக்காக தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. துணிகள், வீட்டு உபயோக பொருட்கள், இனிப்பு, காரவகைகள் போன்றவை இந்த கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இதேபோல் ஜவுளிக்கடைகள், பேக்கரிகள், பட்டாசு கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. நேற்று காலையில் இருந்தே கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. மாலை மற்றும் இரவில் கடைவீதிகளில் கூட்டம் அலைமோதியது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இருந்த போதிலும், மக்கள் பலரும் முக கவசம் அணியாமல் உலா வந்தனர். குழந்தைகளுக்கும் முக கவசம் அணியாமல் அழைத்து வந்தனர். சமூக இடைவெளியை பின்பற்றாமல் கடைவீதிகளிலும், கடைகளிலும் மக்கள் கூட்டம், கூட்டமாக வலம் வந்த காட்சியை பார்க்க முடிந்தது.

பஸ் நிலையம், கடைவீதிகள், சாலைகளில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டதால், தேனி, கம்பம், பெரியகுளம், ஆண்டிப்பட்டி, போடி, சின்னமனூர் உள்பட மாவட்டத்தின் முக்கிய நகரங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தேனி பழைய பஸ் நிலையம், பகவதியம்மன் கோவில் தெரு ஆகிய இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து போலீசார் கண்காணித்தனர். மாவட்டம் முழுவதும் தீபாவளியை முன்னிட்டு 800-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேபோல் ரெடிமேடு ஆடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள், சமையல் பொருட்கள் வாங்குவதற்காக போடி சுற்றுப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் போடி நகரில் குவிந்தனர். குறிப்பாக நேற்று மாலை காமராஜர் பஜார், புதிய நிலையம், பி.எச்.ரோடு, வ.உ.சி. நகர், திருவள்ளுவர் சாலை ஆகிய பகுதிகளில் கூட்டம் அலைமோதியது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


Next Story