கோத்தகிரியில் இயற்கை பேரிடரை சமாளிக்க 2 ஆயிரம் மண் மூட்டைகள் தயார்
கோத்தகிரியில் இயற்கை பேரிடரை சமாளிக்க 2 ஆயிரம் மண் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டம் மலைப்பிரதேசமாக விளங்குகிறது. இங்கு பருவமழை பெய்யும்போது மண் சரிவு, நிலச்சரிவு ஏற்படுகிறது. மேலும் மரங்கள் வேரோடு சாய்தல், வீடுகள் இடிந்து விழுதல் போன்ற சம்பவங்களும் நடைபெறுகிறது. இது தவிர நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதோடு குடியிருப்பு பகுதிகளிலும் தண்ணீர் புகுந்து விடுகிறது. இந்த நேரத்தில் உயிரிழப்பு மற்றும் பொருள் இழப்பு ஏற்படுகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இந்த மழை தீவிரம் அடையும்போது ஏற்படும் இயற்கை பேரிடரை சமாளிக்க அனைத்து துறை அதிகாரிகளை கொண்ட குழுக்கள் நீலகிரி மாவட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் அவர்களுக்கு முறையான பயிற்சியும் வழங்கப்பட்டு உள்ளது.
இதன் ஒரு பகுதியாக கோத்தகிரி பேரூராட்சி சார்பில் நிலச்சரிவு மற்றும் மண்சரிவு ஏற்படாமல் தடுக்க தயார் நிலையில் மண் மூட்டைகள் வைக்கப்பட்டு உள்ளன. மேற்கண்ட இயற்கை பேரிடரின்போது தற்காலிக தடுப்புச்சுவர் அமைக்கும் வகையிலும் மண் மூட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மண் மூட்டைகள் பேரூராட்சி அலுவலகம் வளாகம் அருகில் தயார் நிலையில் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து கோத்தகிரி பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் ஆகியோர் கூறியதாவது:-
வடகிழக்கு பருவமழையில் ஏற்படும் இயற்கை பேரிடரை சமாளிக்கும் வகையில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தற்போது 2 ஆயிரம் மண் மூட்டைகள் தயார் செய்யப்பட்டு உள்ளது. 1000 மண் மூட்டைகள் கோத்தகிரி பேரூராட்சி அலுவலக வளாகத்திலும், மீதமுள்ள 1000 மண் மூட்டைகள் பேரூராட்சிக்கு சொந்தமான வளம் மீட்பு பூங்காவிலும் அடுக்கி வைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. மேலும் பேரூராட்சி வளம் மீட்பு பூங்காவில் கூடுதலாக மண் மூட்டைகளை தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story