தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடைவீதிகளில் குவிந்த பொதுமக்கள் ஜவுளி, பட்டாசு விற்பனை விறுவிறுப்பு


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடைவீதிகளில் குவிந்த பொதுமக்கள் ஜவுளி, பட்டாசு விற்பனை விறுவிறுப்பு
x
தினத்தந்தி 13 Nov 2020 8:27 PM IST (Updated: 13 Nov 2020 8:27 PM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தர்மபுரியில் உள்ள கடைவீதிகளில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர். ஜவுளி, பட்டாசு விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.

தர்மபுரி, 

இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தர்மபுரி நகரில் உள்ள கடை வீதிகளில் பொருட்கள் வாங்க நேற்று காலை முதலே பொதுமக்கள் அதிகளவில் திரண்டனர். தர்மபுரி பஸ் நிலையத்தை ஒட்டி அமைந்துள்ள சின்னசாமி தெரு, சித்தவீரப்பதெரு உள்ளிட்ட கடைவீதிகளில் ஜவுளிக்கடைகள் அதிக அளவில் உள்ளன. இந்த கடைகளில் ஜவுளிகள் வாங்க ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.

இதேபோல் நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள இனிப்பு கடைகளில் பொதுமக்கள் அதிக அளவில் கூடினர். நகரின் பல்வேறு பகுதிகளில் சாலையோரங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக ஜவுளிக்கடைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடைகளிலும் பொதுமக்கள் திரண்டு பொருட்களை வாங்க ஆர்வம் காட்டினார்கள். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தர்மபுரி நகரில் பல்வேறு இடங்களில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பட்டாசு கடைகளில் இளைஞர்கள், சிறுவர்கள் பட்டாசுகள் வாங்க திரண்டனர்.

பொதுமக்கள் அதிகம் கூடும் கடைவீதி பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். திருட்டு மற்றும் வழிப்பறியை தடுக்க இன்ஸ்பெகடர் ரத்தினகுமார், போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சின்னசாமி ஆகியோர் தலைமையில் போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தொடர் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டது. கொரோனா பரவலை தடுக்க கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கைகளில் கிருமிநாசினி தெளிக்க வேண்டும். முககவசங்களை அணிந்தவர்கள் மட்டுமே கடைகளுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும். கடைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் அமல்படுத்தபட்டுள்ளன. இவை முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பதை கண்காணிக்கும் பணியில் நகராட்சி அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டனர்.முக்கிய கடை வீதிகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சாலையின் மையப்பகுதியில் இருபுறங்களிலும் இருசக்கர வாகனங்களை நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தீபாவளி பண்டிகைக்காக பொருட்கள் வாங்க கடைவீதிகளில் கூட்டம் அதிகரித்திருப்பதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தபட்டது.

Next Story