வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வை வெற்றி பெற செய்ய பொதுமக்கள் தயாராக உள்ளனர் - உதயநிதி ஸ்டாலின் பேச்சு


வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வை வெற்றி பெற செய்ய பொதுமக்கள் தயாராக உள்ளனர் - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 13 Nov 2020 8:39 PM IST (Updated: 13 Nov 2020 8:39 PM IST)
t-max-icont-min-icon

வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வை வெற்றிபெற செய்ய பொதுமக்கள் தயாராக இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

நாமக்கல், 

நாமக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நாமக்கல்லில் நடந்தது. இதில் மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க.வில் இளைஞர் அணி என்பது ஒரு போர் படையாகும். எத்தனை அணிகள் இருந்தாலும், இளைஞர் அணி தான் முதலிடம் என மறைந்த தலைவர் கருணாநிதி எப்போதும் பெருமையாக சொல்வார். நான் இளைஞர் அணி செயலாளராக பொறுப்பேற்ற பிறகு 2 மாதத்திற்கு ஒரு போராட்டம் நடத்தப்படுகிறது. அனைத்திலும் தி.மு.க.விற்கு வெற்றி கிடைத்து உள்ளது. வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வை வெற்றி பெற செய்ய தமிழக மக்கள் தயாராக இருக்கிறார்கள். அவர்கள் திசை மாறிவிடாமல், நாம் வழிநடத்தி செல்ல வேண்டும்.

கடந்த ஆண்டு வரை இளைஞர் அணியில் வெறும் 4,500 நிர்வாகிகள் தான் இருந்தார்கள். இப்போது தமிழகத்தில் 2 லட்சத்து 75 ஆயிரம் நிர்வாகிகளை நியமித்து உள்ளோம். மேலும் ஒரு சட்ட மன்ற தொகுதிக்கு 10 ஆயிரம் பேரை சேர்க்க திட்டமிடப்பட்டது. அதில் நாமக்கல் மேற்கு மாவட்டம் தான் தமிழகத்திலேயே முதலில் அந்த இலக்கை எட்டியது. தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்துவதும், தலைவரை முதல்-அமைச்சர் நாற்காலியில் அமர வைப்பதும் தான் நமது ஒரே இலக்கு. இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து அரசு பள்ளிகளில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 படிக்கும் ஏழை மாணவிகள் 5 பேருக்கு ஆன்-லைன் வகுப்பில் பங்கேற்க வசதியாக செல்போன் வழங்கப்பட்டது. முன்னதாக கூலிப்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொரோனா காலத்தில் மரணமடைந்த கட்சியினரின் குடும்பத்துக்கு, குடும்ப நல நிதியை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். தொடர்ந்து சேந்தமங்கலத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாற்று கட்சியினர் தி.மு.க.வில் தங்களை இணைத்து கொண்டனர். மேலும் அண்ணாநகர், பெருமாப்பட்டி, செல்லப்பாகாலனி உள்ளிட்ட பகுதிகளில் தி.மு.க. கொடியை உதயநிதி ஸ்டாலின் ஏற்றி வைத்தார்.

இதுதவிர பட்டணம் பகுதியில் மறைந்த தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி அருந்ததியர்களுக்கு வழங்கிய 3 சதவீத இடஒதுக்கீட்டில் பயன் அடைந்த பயனாளிகளுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டார். மாலையில் சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற சுயமரியாதை சூரியன் என்ற கவிதை தொகுப்பை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டு பேசினார்.

இந்த நிகழ்ச்சிகளில் நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், மேற்கு மாவட்ட செயலாளர் கே.எஸ்.மூர்த்தி எம்.எல்.ஏ., அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ., முன்னாள் மத்திய இணை மந்திரி காந்திசெல்வன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்கள் கதிர்வேல், மதுரா செந்தில், மாவட்ட துணை அமைப்பாளர்கள் நந்தகுமார், காந்தி, இளம்பரிதி, ஆனந்தகுமார், அருள், மதிவேந்தன், சுந்தர், சுரேஷ்குமார், சரவணன், செல்வம், பாலாஜி மற்றும் சேந்தமங்கலம் ஒன்றிய செயலாளர் அசோக்குமார், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் வக்கீல் ராஜேந்திரன், விமலா சிவக்குமார், நாமகிரிப்பேட்டை ஒன்றியகுழு உறுப்பினர் சித்ரா சரவணன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் கவுரவ செயலாளர் வக்கீல் அய்யாவு உள்பட கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story