விருத்தாசலம் அருகே கழுத்தை அறுத்து பெண் கொலை போலீசார் விசாரணை


விருத்தாசலம் அருகே கழுத்தை அறுத்து பெண் கொலை போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 13 Nov 2020 9:33 PM IST (Updated: 13 Nov 2020 9:33 PM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் அருகே கழுத்தை அறுத்து பெண் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது.

விருத்தாசலம், 

விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள குறுக்கத்தஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மனைவி சாந்தி (வயது 40). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். அவருக்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். செல்வராஜ் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

சாந்தி, கடந்த 7 மாதமாக விருத்தாசலம் ஆலடி சாலையில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை நீண்டநேரமாகியும் சாந்தி வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. அவரது வீட்டின் கதவு பூட்டப்படாமல், சாத்தப்பட்ட நிலையிலேயே இருந்தது.

இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை திறந்து பார்த்தனர். அப்போது வீட்டின் முன் பகுதியில் சாந்தி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் கிருபாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரேம்குமார், கணேசன், புஷ்பராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அங்கு பிணமாக கிடந்த சாந்தியின் உடலை பார்வையிட்டனர்.

அப்போது அவர், அரைநிர்வாண கோலத்தில் பிணமாக கிடந்தார். அவரது கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், வயிற்றில் கத்தியால் குத்தியதற்கான காயங்கள் இருந்தன. மேலும் அவரது உடலின் அருகே செல்போன் மற்றும் ஆண் ஒருவரது சட்டையும் கிடந்தது. இதுதவிர செருப்பு அணிந்த ஒருவர், ரத்தத்தை மிதித்தபடி வீடு முழுவதும் நடந்து சென்றதற்கான காலடித்தடமும் பதிவாகி இருந்தது. இதனால் அவரை யாரோ கொலை செய்து விட்டு தப்பி சென்றது தெரியவந்தது.

தொடர்ந்து கடலூரில் இருந்து மோப்ப நாய் அர்ஜூன் வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி, வெண்ணுமலையர் கோவில் வழியாக பெரிய கண்டியாங்குப்பம் வரை ஓடிச்சென்று நின்றது. ஆனால் கொலையாளிகள் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இதற்கிடையே கடலூரில் இருந்து வந்த தடயவியல் நிபுணர்கள், சாந்தி வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகள் மற்றும் தடயங்களை சேகரித்து சென்றனர். தொடர்ந்து போலீசார், சாந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சாந்தியை யாரேனும் கற்பழித்து கொலை செய்தார்களா? அல்லது அவரது கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். மேலும் கொலையாளியை விரைந்து பிடிக்க, போலீசாருக்கு உத்தரவிட்டார். கழுத்தை அறுத்து பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story