காட்டுயானை மிதித்து பெண் பலி பசுமாட்டை தேடி வனப்பகுதிக்குள் சென்றபோது பரிதாபம்
எர்ணாகுளம் அருகே பசுமாட்டை தேடி வனப்பகுதிக்குள் சென்ற பெண்ணை காட்டுயானை மிதித்து கொன்றது.
பெரும்பாவூர்,
எர்ணாகுளம் மாவட்டம் மாமலகண்டம் அருகே உள்ள இளம்பிலாசேரி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் குட்டி. இவருடைய மனைவி நளினி(வயது 50). இவர்களுக்கு அஞ்சு என்ற மகளும், ஷினோ என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் கிருஷ்ணன் குட்டி தனது வீட்டில் கால்நடைகளை வளர்த்து வருகிறார். அவைகளை அருகில் உள்ள வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் அதிகாலையில் வழக்கம்போல் கால்நடைகள் மேய்ச்சலுக்கு விடப்பட்டன. அதில் ஒரு பசுமாடு மட்டும் வீடு திரும்பவில்லை. அந்த பசுமாட்டை தேடி வனப்பகுதிக்குள் நளினி சென்றார்.அப்போது புதர் மறைவில் நின்றிருந்த காட்டுயானை ஒன்று திடீரென அவரை துரத்தியது. இதை சற்றும் எதிர்பாராத நளினி தப்பி ஓட முயன்றார். எனினும் துரத்தி வந்த காட்டுயானை துதிக்கையால் அவரை தாக்கி கீழே தள்ளி காலால் மிதித்தது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே நளினி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதற்கிடையில் பசுமாட்டை தேடி சென்ற நளினி நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால், அவரை தேடி கிருஷ்ணன் குட்டி மற்றும் உறவினர்கள் வனப்பகுதிக்குள் சென்றனர். அப்போது அங்குள்ள ஒரு பாறைக்கு அருகில் உடல் நசுங்கிய நிலையில் நளினி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே அடிமாலி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வனச்சரகர் சசிதரன் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்த பார்வையிட்டனர். அப்போது காட்டுயானை தாக்கி நளினி இறந்து இருப்பது உறுதியானது. தொடர்ந்து அவரது உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அடிமாலி தாலுகா ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் சம்பவம் குறித்து வனத்துறையினரும், போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story