தூத்துக்குடியில் கொட்டும் மழையில் தீபாவளி விற்பனை கோவில்பட்டியிலும் பொதுமக்கள் குவிந்தனர்


தூத்துக்குடியில் கொட்டும் மழையில் தீபாவளி விற்பனை கோவில்பட்டியிலும் பொதுமக்கள் குவிந்தனர்
x
தினத்தந்தி 13 Nov 2020 11:22 PM IST (Updated: 13 Nov 2020 11:22 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் கொட்டும் மழையில் தீபாவளி விற்பனை நேற்று நடந்தது.

தூத்துக்குடி, 

நாடு முழுவதும் பொதுமக்களால் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் தீபாவளியும் ஒன்றாகும். இந்த தீபாவளி திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை காலையில் குளித்து புது துணிகள் அணிந்து இறைவனை வழிபடுவார்கள்.

அதன் பின்னர் பட்டாசுகளை வெடித்து பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவார்கள். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை இன்று (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

மக்கள் கூட்டம்

நேற்று முதலே தீபாவளி பண்டிகை களைகட்ட தொடங்கியது. ஆனால் நேற்று காலையில் இருந்தே தூத்துக்குடியில் பலத்த மழை பெய்தது. ஆனால் மழையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் தூத்துக்குடி பஜாரில் உள்ள ஜவுளிக்கடைகளில் துணிகளை வாங்கிச் சென்றனர். இதனால் கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சாலையோரங்களில் தற்காலிக கடைகள் பல அமைக்கப்பட்டு இருந்தன. சிறுவர்கள் ஆர்வத்துடன் பட்டாசு கடைகளில் வெடிகளை வாங்கி சென்றனர்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளதால் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருந்தது. பொதுமக்கள் அனைவரும் முககவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தினர்.

கோவில்பட்டி

இதேபோல் கோவில்பட்டியில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. மெயின் ரோடு, கிருஷ்ணன் கோவில் தெரு, மாதா கோவில் தெரு, தெற்கு பஜார், கடைக்காரர் தெரு, புதுரோடு பகுதிகளில் மக்கள் ஏராளமானவர்கள் குவிந்ததால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கலைக்கதிரவன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுதர்சன் (கிழக்கு), அய்யப்பன் (மேற்கு), அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மாவதி, சப்-இன்ஸ்பெக்டர்கள், போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து மெயின் ரோட்டில் செல்லும் வாகனங்களை மாற்று வழியில் அனுப்பி வைத்தனர். 

Next Story