மகா விகாஸ் அகாடி நினைத்தால் பா.ஜனதா காலியாகிவிடும் மந்திரி நவாப் மாலிக் கூறுகிறார்


மகா விகாஸ் அகாடி நினைத்தால் பா.ஜனதா காலியாகிவிடும் மந்திரி நவாப் மாலிக் கூறுகிறார்
x
தினத்தந்தி 14 Nov 2020 12:32 AM IST (Updated: 14 Nov 2020 12:32 AM IST)
t-max-icont-min-icon

மகா விகாஸ் அகாடி கூட்டணி நினைத்தால் பாரதீய ஜனதா காலியாகிவிடும் என மந்திரி நவாப் மாலிக் கூறியுள்ளார்.

மும்பை, 

சிவசேனா தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி அமைத்து இந்த மாத்தத்துடன் ஒரு ஆண்டு ஆகப்போகிறது.

இந்தநிலையில் முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உள்பட பாரதீய ஜனதா தலைவர்கள் பலரும் ஆளும் கூட்டணி 5 ஆண்டுகள் நீடிக்க வாய்ப்பில்லை. உள்கட்சி பூசல்கள் காரணமாக இந்த கூட்டணி அரசு தானாகவே கவிழும் என கூறி வருகின்றனர்.

இதற்கு பதிலடி அளிக்கும் விதமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும், மாநில மந்திரியுமான நவாப் மாலிக் நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறியதாவது:-

வெற்றிகரமாக நிறைவு செய்யும்

மகா விகாஸ் அகாடி அரசு குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தின் அடிப்படையில் ஒற்றுமையாக செயல்படுவதால் முழு ஆட்சிகாலத்தையும் வெற்றிகரமாக நிறைவு செய்யும்.

3 கட்சிகளின் சித்தாந்தங்களும் வேறுபட்டவை. எந்த கட்சியும் தங்கள் சொந்த சித்தாந்தத்தை கைவிட்டுவிட்டு அரசில் அங்கம் வகிக்கவில்லை.

நாங்கள் நினைத்தால் பாரதீய ஜனதா காலியாகிவிடும். ஆனால் நாங்கள் அதை செய்ய விரும்பவில்லை. சில பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் எங்கள் கட்சியில் சேர தயாராக உள்ளனர். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சமீபத்தில் பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் கட்சே அதிருப்தி காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி தேசியவாத காங்கிரசில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story