மருத்துவ மாணவர்கள் கண்டறிந்த அரிய வகை வல்லூறு இன பறவை


மருத்துவ மாணவர்கள் கண்டறிந்த அரிய வகை வல்லூறு இன பறவை
x
தினத்தந்தி 14 Nov 2020 3:37 AM IST (Updated: 14 Nov 2020 3:37 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் கால்நடை மருத்துவ மாணவர்கள் அரிய வகை பறவையான அமூர் வல்லூறுவை கண்டறிந்தனர்.

புதுச்சேரி, 

இந்தியாவின் பறவை மனிதர் டாக்டர் சலீம் அலியின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதையொட்டி புதுவையிலும் பறவை ஆர்வலர்கள் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.

இந்த ஆண்டின் கணக்கெடுப்பில் ராஜீவ்காந்தி கால்நடை மருத்துவக் கல்லூரியில் படிக்கும் முதுகலை 2-ம் ஆண்டு மாணவர் டாக்டர் விக்னேஷ்வரன், இளங்கலை 4-ம் ஆண்டு மாணவர் பூஷன் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஈடுபட்டனர். அப்போது அவர்களது பார்வையில் அமூர் வல்லூறு என்ற அரியவகை பறவை சிக்கியது. மரப்பாலம் சந்திப்பு அருகே மின் உயர் மின் அழுத்த கம்பியில் அமர்ந்திருந்த அந்த பறவையை அவர்கள் புகைப் படம் எடுத்துக் கொண்டனர்.

இந்த அரிய வகை பறவை குறித்து டாக்டர் விக்னேஷ் வரன் கூறியதாவது:-

வேட்டையாடும் குணம்

அமூர் வல்லூறு வேட்டையாடி உண்ணும் குடும்பத்தை சேர்ந்ததாகும். நீண்டதூரம் இடம்பெயரும் ஆற்றல் பெற்று இருப்பது இதன் தனிச்சிறப்பு. தெற்கு சைபீரியா மற்றும் வடக்கு சீன பகுதிகளில் இடம்பெயர்ந்து பனிக்காலத்தில் தங்களை பாதுகாத்துக் கொள்ள மற்றும் உணவு பற்றாக்குறை காரணமாக தென் ஆப்பிரிக்காவுக்கு செல்லும்.

அவ்வாறு இடம்பெயரும் போது இந்தியா, இலங்கை, மொரீஷியஸ் தீவுகளில் ஓய்வு எடுத்து விட்டு மீண்டும் தனது பயணத்தை தொடரும். இந்தியாவில் இந்த பறவைகள் நாகலாந்து மாநிலத்தில் அதிக எண்ணிக்கையில் காணப்படும். நாகலாந்து தவிர வடகிழக்கு மாநிலங்கள், மற்றும் தென் தமிழகத்திலும் இதை காணலாம்.

32 ஆண்டுகளில் முதல்முறை

சமீபத்தில் மணிப்பூர் மாநிலத்தில் 2 அமூர் வல்லூறுகள் 29 ஆயிரம் கிலோ மீட்டர் இடம்பெயர்ந்து சென்றது கண்டறியப்பட்டது. அத்தகைய அமூர் வல்லூறு புதுவையில் முதல் முறையாக காணப்பட்டது. கடந்த 32 ஆண்டுகளில் புதுவையில் இந்த பறவை காணப்பட்டதாக பதிவுகள் ஏதும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story