சென்னை விமான நிலையத்தில் ரூ.3½ கோடி தங்கம் சிக்கியது தனியார் நிறுவன ஊழியர்கள் உள்பட 5 பேர் கைது
சென்னை விமான நிலையத்தில் துபாய் மற்றும் அபுதாபியில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.3 கோடியே 60 லட்சம் மதிப்புள்ள 7 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இதுதொடர்பாக தனியார் நிறுவன ஊழியர்கள் உள்பட 5 பேரை கைது செய்தனர்.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன்சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர்.
விமானத்தில் வந்த பயணிகள் அனைவரும் சோதனைகளை முடித்துக்கொண்டு வெளியே சென்றுவிட்டனர். பின்னர் குடியுரிமை பகுதியில் உள்ள கழிவறைக்குள் சென்று சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அங்கு கருப்பு நிற டேப் ஒட்டப்பட்ட 2 பொட்டலங்கள் இருந்தன. அவற்றை சுங்க இலாகா அதிகாரிகள் பிரித்து பார்த்தபோது, அதில் தங்க கட்டிகளை மறைத்து வைத்து இருப்பது தெரிந்தது.
துபாயில் இருந்து விமானத்தில் வந்த பயணி ஒருவர், அந்த தங்கத்தை கடத்தி வந்து கழிவறையில் மறைத்து வைத்துவிட்டு சென்று இருப்பது தெரிந்தது. இதையடுத்து அதை யார் எடுத்து செல்கிறார்கள்? என சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர்.
தனியார் நிறுவன ஊழியர்
அப்போது தனியார் பராமரிப்பு நிறுவன ஊழியரான சென்னையை சேர்ந்த குணசேகர் (வயது 31) என்பவர் கழிவறையில் இருந்த தங்கத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்தார். உடனடியாக அங்கிருந்த சுங்க இலாகா அதிகாரிகள், அவரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.
தனியார் பராமரிப்பு நிறுவன மேற்பார்வையாளர் குமார் (28), மற்றொரு ஊழியர் சங்கர் (20) ஆகியோர் சொன்னதால் தான் கழிவறையில் பயணி மறைத்து வைத்திருந்த தங்கத்தை எடுத்து சென்று, விமான நிலையத்தின் வெளியே காத்திருக்கும் அவரிடம் தர உள்ளதாக அதிகாரிகளிடம் குணசேகர் தெரிவித்தார்.
5 பேர் கைது
இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் குணசேகருடன், விமான நிலையத்தின் வெளியே வந்தனர். அங்கு அந்த விமானத்தில் தங்கம் கடத்தி வந்த பயணியான திருச்சியை சேர்ந்த ஷேக் உசேன் (35) என்பவரை கைது செய்தனர்.
அதேபோல் இவரிடம் கடத்தல் தங்கத்தை வாங்கி செல்ல விமான நிலையம் வந்த சென்னையை சேர்ந்த சையத் இப்ராகிம் ஷா (21) என்பவரையும் மடக்கி பிடித்தனர். தனியார் நிறுவன ஊழியர்கள் உள்பட 5 பேரையும் கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள், அவர்களிடம் இருந்து ரூ.95 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 900 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.
7 கிலோ
அதேபோல் அபுதாபியில் இருந்து சென்னை வந்த சிறப்பு விமானத்தில் பயணிகள் அனைவரும் இறங்கி சென்றனர். பின்னர் அந்த விமானத்தில் ஏறி சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது விமானத்தில் உள்ள கழிவறையில் 3 பொட்டலங்களை கைப்பற்றினார்கள். அதை பிரித்து பார்த்தபோது அதில் தங்க கட்டிகள் இருந்தன. ரூ.2 கோடியே 65 லட்சம் மதிப்புள்ள 5 கிலோ 100 கிராம் தங்க கட்டிகளை கைப்பற்றினார்கள்.
அபுதாபியில் இருந்து அந்த தங்கத்தை கடத்தி வந்த பயணிகள், விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் நடவடிக்கைக்கு பயந்து அதை விமானத்தின் கழிவறையில் வைத்துவிட்டு சென்றார்களா? அல்லது ஊழியர்கள் உதவியுடன் கடத்தல் தங்கத்தை கழிவறையில் இருந்து வெளியே கொண்டு வர திட்டமிட்டார்களா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் ரூ.3 கோடியே 60 லட்சம் மதிப்புள்ள 7 கிலோ தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தங்கம் கடத்தலுக்கு தனியார் பராமரிப்பு நிறுவன ஊழியர்களே உடந்தையாக இருந்த சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story