புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர் மழையால் கடை வீதிகள் வெறிச்சோடியது
மாவட்டத்தில் தொடர் மழையால் கடை வீதிகள் வெறிச்சோடியது. தீபாவளி பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
புதுக்கோட்டை,
தீபாவளி பண்டிகை இன்று (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. புதுக்கோட்டையில் பண்டிகைக்கான புதிய ஜவுளி மற்றும் பட்டாசு உள்ளிட்ட பொருட்கள் வாங்க வழக்கமாக முந்தைய நாட்களில் கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும். இந்த நிலையில் புதுக்கோட்டையில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காலை 10 மணிக்கு மேல் மழை திடீரென பெய்ய தொடங்கியது. இந்த மழை இடைவிடாது தொடர்ந்து பெய்தபடி இருந்தது. பரவலான மழையினால் புதுக்கோட்டையில் கீழ ராஜ வீதி வெறிச்சோடியது. மழையின் காரணமாக தீபாவளி பண்டிகைக்கான பொருட்கள் வாங்க பொதுமக்கள் வருகை குறைந்திருந்து. இருப்பினும் ஒரு சிலர் குடையை பிடித்தப்படி கடைவீதிக்கு பொருட்கள் வாங்க வந்தனர். சிலர் மழையில் நனைந்தப்படி சென்றனர்.
குடைகள் விற்பனை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சாலையோரம் தரைக்கடை அமைத்து வியாபாரம் செய்தவர்கள் பெரும் அவதி அடைந்தனர். மழையின் காரணமாக அதன்மேல் தார்பாயை போட்டு மூடி வைத்திருந்தனர். வியாபாரம் செய்ய முடியாமல் தவித்தனர். ஒரு சிலர் மழையோடு, மழையாக பொருட்களை விற்பனை செய்தனர். விடாமல் பெய்த மழையினால் பொதுமக்களும், வியாபாரிகளும் கடும் அவதி அடைந்தனர். கிராமப்புறத்தில் இருந்து பஸ்களில் டவுன் பகுதிக்கு வந்தவர்கள் மழையில் நனைந்தப்படியே கடைவீதிக்கு சென்றனர். இதற்கிடையில் மழையின் காரணமாக குடைகள் விற்பனை சாலையோர கடைகளில் மும்முரமாக நடந்தது. குடையை வாங்கி அதனை பிடித்துக்கொண்டு கடைவீதியில் நடந்து சென்று கடைகளில் பொருட்கள் வாங்கினர். இடைவிடாது பெய்த மழையினால் சாலைகளில் மழை நீர் ஓடியது. பள்ளமான இடத்தில் மழைநீர் தேங்கியது. மழையின் காரணமாக மெதுவாக ஊர்ந்து சென்ற வாகனங்களால் நகரப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதற்கிடையில் தீபாவளி பண்டிகைக்காக வெளியூரில் இருந்து புதுக்கோட்டை வந்தவர்கள் புதிய பஸ் நிலையத்தில் இறங்கி மழையில் நனைந்தப்படி காத்திருந்ததை காணமுடிந்தது. பஸ் நிலையத்திலும் பயணிகள் கூட்டம் நேற்று காலை குறைவாக இருந்தது. மாலைக்கு பின் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
கோட்டைப்பட்டினம்
கடலோர பகுதிகளான கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், மீமிசல் ஆகிய பகுதிகள் காலையில் இருந்தே மழை விட்டு விட்டு பெய்தது. பொதுமக்கள் மழையையும் பொருட்படுத்தாமல் தீபாவளி பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர். இதேபோல் மணமேல்குடி, கடற்கரை பகுதிகளான வடக்கு அம்மாபட்டிணம், பொன்னகரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் கனமழை பெய்தது. மேலும் கடலில் கனமழை பெய்ததால் அதிகாலையில் கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடிய மீனவர்கள் சற்று தாமதமாக கடலுக்கு சென்றனர்.
திருவரங்குளம்
திருவரங்குளம், வேப்பங்குடி, திருக்கட்டளை, மேட்டுப்பட்டி, கைக்குறிச்சி, கேப்பறை, தோப்புக்கொல்லை, வம்பன் நாலுரோடு, கொத்தகோட் டை, பூவரசம்குடி, வாண்டாகோட்டை, குளவாய்பட்டி, கீழையூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் அவ்வப்போது, விட்டு, விட்டு மழை பெய்தது.
அன்னவாசல்
அன்னவாசல், இலுப்பூர், வயலோகம், கீழக்குறிச்சி, முக்கண்ணாமலைப்பட்டி, குடுமியான்மலை, பரம்பூர், கிளிக்குடி, சித்தன்னவாசல், உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலையில் இருந்து லேசானது முதல் கனமழை பெய்தது. இந்த மழை இரவுவரை தொடர்ந்து பெய்தது. இதனால் தீபாவளிக்கு பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர். தரைக்கடை வியாபாரிகள் கடை போட முடியாமல் தவித்தனர். இந்த மழையால் சாலையோரங்களில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது. முக்கண்ணாமலைப்பட்டி மற்றும் மதிய நல்லூரில் வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெற வேண்டிய வாரச்சந்தை தீபாவளியின் காரணமாக நேற்று வெள்ளிக்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் காலை முதலே தொடர்ந்து மழை பெய்ததால் பெரும்பாலானோர் சந்தைக்கு வரவில்லை. இதனால் வாரச்சந்தைகளும் வெறிச்சோடி காணப்பட்டது.
அறந்தாங்கி
அறந்தாங்கி பகுதியில் நேற்று காலை முதல் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் வர்த்தகம் பாதிக்கப்பட்டது. சிலர் மழையையும் பொருட்படுத்தாமல் பொருட்களை வாங்கி சென்றனர்.
அரிமளம், கே.புதுப்பட்டி, கீழாநிலைக்கோட்டை, கல்லூர், ராயவரம், கடியாபட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காலையிலிருந்து விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் தீபாவளிக்கு தேவையான பொருட் களை வாங்குவதில் சிரமம் அடைந்தனர். தரைக் கடை வியாபாரிகள் மற்றும் பட்டாசு வியாபாரிகளின் விற்பனை பாதிக்கப்பட்டது.
பொன்னமராவதி-கறம்பக்குடி
பொன்னமராவதி பகுதியில் விட்டுவிட்டு மழைபெய்ததால் கடைவீதிகளில் கூட்டம் குறைவாக காணப்பட்டது. கறம்பக்குடி பகுதியில் நேற்று காலை தொடங்கி இரவு வரை கனமழை பெய்தது. இதனால் தரைக்கடை வியாபாரிகள் வியாபாரம் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டனர். இதேபோல் பொருட்களை வாங்க வந்த பொதுமக்களும் அவதிபட்டனர். தொடர் மழையால் பட்டாசு விற்பனையும் பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story