வாணியம்பாடி போலீஸ்காரருக்கு சிறந்த காவலருக்கான பட்டம்: சூப்பிரண்டு வழங்கினார்
வாணியம்பாடி போலீஸ்காரருக்கு சிறந்த காவலருக்கான பட்டத்தை சூப்பிரண்டு வழங்கினார்.
வாணியம்பாடி,
திருப்பத்தூர் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு, போக்குவரத்து நெரிசல், குற்றச்செயல்கள், வழிப்பறி, திருட்டு, கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும், எனப் போலீஸ் அதிகாரிகளுக்கு சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவிட்டார்.
இது மட்டுமின்றி பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும், போலீஸ் நிலையங்களில் கட்டப் பஞ்சாயத்து, வாகனச் சோதனையின்போது பொதுமக்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்வது போன்ற ஒழுங்கீனமான செயல்களை யாரும் செய்யக்கூடாது என போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். இதுபோன்ற உத்தரவுகள் பொதுமக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது.
இந்தநிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் முக்கிய வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரியை கைது செய்ய உறுதுணையாகச் செயல்படும் போலீஸ்காரர், போலீஸ் நிலையத்தில் பதிவேடுகளை சிறப்பாகப் பராமரித்தல், பொதுமக்களிடம் நற்பெயரைப் பெறும் வகையில் பணி செய்தல், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்தல், வாகனச் சோதனையின்போது சட்ட விரோதச் செயல்களை கண்டுபிடித்தல் போன்ற செயல்களில் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றும் போலீசார் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு, ‘வாரத்தின் சிறந்த காவலர்’ என்ற பாராட்டுப் பத்திரமும், ரூ.500 ஊக்கத்தொகையும் வழங்கப்படும் எனப் போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் அறிவித்தார்.
அதன்படி கடந்த வாரம் வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலக பணிகளில் சிறப்பாக பணியாற்றிய காவலூர் போலீஸ் நிலையத்தில் பணிப்புரிந்து வரும் போலீஸ்காரர் சத்தீஷ்குமார் என்ற காவலருக்கு’ வாரத்தின் சிறந்த காவலர் எனப் பட்டத்துடன், ரூ.500 ஊக்கதொகை அளித்து, புத்தகங்களை வழங்கி போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார்.
Related Tags :
Next Story