செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்
செங்கம் அருகே காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைக்கக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறிய தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கம்,
செங்கத்தை அடுத்த சின்னகல்தாம்பாடி பகுதியை சேர்ந்தவர் சவுந்தரபாண்டியன் (வயது 21). இவர் கடந்த சில வருடங்களாக அதேப்பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளவும் சவுந்தரபாண்டியன் முடிவு செய்துள்ளார். ஆனால் இவர்களின் திருமணத்திற்கு பெண்ணின் பெற்றோர் சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து முடிவுசெய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையறிந்த அவர் பெண்ணின் வீட்டுக்கு சென்று, திருமணம் செய்துவைக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு பெண்ணின் பெற்றோர் மறுத்துவிட்டனர். இதனால் மனமுடைந்த சவுந்தரபாண்டியன் நேற்று கோனாங்குட்டை பகுதிக்கு சென்று அங்குள்ள செல்போன் கோபுரம் மீது ஏறினார். கோபுரத்தின் உச்சிக்கு சென்றதால் இதை பார்த்த பொதுமக்கள் செங்கம் போலீஸ்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக செங்கம் துணைபோலீஸ் சூப்பிரண்டு சரவணக்குமார் மற்றும் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். செல்போன் கோபுரத்தில் ஏறிய சவுந்தரபாண்டியனுடன், துணைபோலீஸ் சூப்பிரண்டு செல்போனில் பேசி கீழே இறங்கிவருமாறு கூறினார்.
அதற்கு தான் காதலித்த பெண்ணுடன் திருமணம் செய்து வைக்காவிட்டால் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தார். திருமணம் செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சவுந்தரபாண்டியன் செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே இறங்கிவந்தார். அவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
இந்த சம்பவத்தில் அந்தப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story