பேரூர் அருகே, தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த நாட்டு துப்பாக்கி பறிமுதல் - முன்னாள் ராணுவ வீரருக்கு வலைவீச்சு


பேரூர் அருகே, தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த நாட்டு துப்பாக்கி பறிமுதல் - முன்னாள் ராணுவ வீரருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 15 Nov 2020 3:15 AM IST (Updated: 15 Nov 2020 7:21 AM IST)
t-max-icont-min-icon

பேரூர் அருகே தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக முன்னாள் ராணுவ வீரரை வலைவீசி தேடி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

பேரூர்,

கோவை பேரூரை அருகே புலுவப்பட்டியில் ஆலாந்துறை போலீசார் நேற்று முன்தினம் வாகனச்சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரை போலீசார் நிறுத்தி சோதனை செய்ய முயன்றனர். ஆனால் அவர் நிற்காமல் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றார்.

இதையடுத்து அவரை போலீசார் துரத்தி சென்றனர். அவர் சென்னனூர் சாலையில் உள்ள ராமாக்காள் என்பவரது தோட்டத்திற்குள் புகுந்தார். பின்னர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். போலீசார் அந்த தோட்டத்தில் சோதனை செய்தபோது, அங்கு ஒரு நாட்டு துப்பாக்கியும், 18 மதுபாட்டில்கள் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், போலீசாரிடம் இருந்து தப்பியோடியது ஆலாந்துறை பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த ரங்கராஜ் (வயது 54) என்பதும், மதுபாட்டில்களை வாங்கிக் கொண்டு வந்தபோது போலீசார் தடுத்து நிறுத்த முயன்றதால் தப்பி சென்றதும் தெரியவந்தது. மேலும், தோட்டத்தில் கைப்பற்றப்பட்ட நாட்டு துப்பாக்கி, கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ரஞ்சித்குமார் (24) என்பவருக்கு சொந்தமானதும், இதற்கு அவர் உரிய அனுமதி பெறவில்லை என்பதும், இவர் ராமக்காளின் அண்ணன் மகன் என்பதும் தெரியவந்தது. மேலும் ரஞ்சித்குமார் இந்திய ராணுவத்தில் 3 ஆண்டுகள் வேலை பார்த்து வந்ததும், பின்னர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பணியிடை நீக்கம் செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்ததாக ரங்கராஜை கைது செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள முன்னாள் ராணுவ வீரர் ரஞ்சித்குமாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story