கூடலூர் அருகே, கட்டுப்பாட்டை இழந்த கார் மற்றொரு கார் மீது மோதியது - போக்குவரத்து பாதிப்பு
கூடலூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் மற்றொரு கார் மீது மோதியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கூடலூர்,
கூடலூரில் இருந்து ஊட்டிக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகி வருகிறது. கூடலூரில் இருந்து நடுவட்டம் வரையிலான செங்குத்தான மலைப்பாதையில் விபத்துகளை தடுக்க வாகனங்களை 2-வது கியரில் இயக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால் பலரும் அதை கடைபிடிப்பது இல்லை.
இதற்கிடையில் ஊரடங்கில் தளர்வுகள் இருந்தாலும், நீலகிரி மாவட்டத்துக்குள் வருவதற்கு இ-பதிவு அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் வரத்து மிகவும் குறைவாகவே உள்ளது. எனினும் தீபாவளி பண்டிகையையொட்டி சமவெளியில் இருந்து கடந்த சில நாட்களாக ஏராளமான வாகனங்கள் நீலகிரிக்கு இயக்கப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று காலை 7 மணியளவில் கோவையில் இருந்து ஊட்டி வழியாக கூடலூருக்கு கார் ஒன்று வந்து கொண்டு இருந்தது. கூடலூர் அக்ரஹாரம் தெரு அருகே வந்தபோது திடீரென கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. பின்னர் சாலையோரம் நின்றிருந்த மற்றொரு கார் மீது வேகமாக மோதியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்த போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் பூ ராஜன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, மலைப்பாங்கான சாலையில் செல்லும்போது வாகன ஓட்டிகள் 2-வது கியரை பயன்படுத்த வேண்டும் என எச்சரிக்கை பலகைகள் சாலையோரம் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் சமவெளியில் இருந்து வரும் வாகன உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் அதை பொருட்படுத்துவதில்லை. எனவே விதிமுறைகளை பின்பற்றாத வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
Related Tags :
Next Story