குமரி மாவட்டத்தில் பரவலாக மழை திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது


குமரி மாவட்டத்தில் பரவலாக மழை திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது
x
தினத்தந்தி 15 Nov 2020 3:00 AM IST (Updated: 15 Nov 2020 8:38 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை விட்டு, விட்டு பெய்து வருகிறது. நேற்று முன்தினம் காலையில் மாவட்டம் முழுவதும் மேகமூட்டமாக இருந்தது. பின்னர் நாகர்கோவில் நகரில் மழை விட்டு, விட்டு பெய்தது. இதனால் தீபாவளி பண்டிகைக்கு பொருட்கள் வாங்கச் சென்ற மக்கள் கடை வீதிகளில் மழையில் நனைந்தபடியும், குடைகளை பிடித்தபடியும் பொருட்கள் வாங்கச் சென்றதை காண முடிந்தது. இதேபோல மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

நேற்று முன்தினம் காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு:-

பேச்சிப்பாறை-10, பெருஞ்சாணி- 9.8, புத்தன் அணை- 9.2, சிற்றார் 1- 9.4, சிற்றார் 2- 7, பூதப்பாண்டி- 4.2, கன்னிமார்- 7.6, கொட்டாரம்- 5.6, குழித்துறை- 7, மயிலாடி- 12.4, நாகர்கோவில்- 7, சுருளக்கோடு- 6.4, பாலமோர்- 8, அடையாமடை- 8, முள்ளங்கினாவிளை- 8, ஆனைக்கிடங்கு- 5.4, முக்கடல் அணை- 2.2 என்ற அளவில் மழை பதிவாகி உள்ளது. இதில் அதிகபட்சமாக மயிலாடி பகுதியில் 12.4 மி.மீ. பதிவாகி உள்ளது.

இந்த மழையின் காரணமாக குமரியின் குற்றாலம் எனப்படும் திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரித்து தண்ணீர் கொட்டியது. மேலும் ஆறுகள், கால்வாய்களிலும் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

Next Story