நாடா இல்லா விசைத்தறி தொழிலை பாதுகாக்க மின் கட்டண சலுகை - உற்பத்தியாளர்கள் கோரிக்கை


நாடா இல்லா விசைத்தறி தொழிலை பாதுகாக்க மின் கட்டண சலுகை - உற்பத்தியாளர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 15 Nov 2020 3:30 AM IST (Updated: 15 Nov 2020 9:00 AM IST)
t-max-icont-min-icon

நாடா இல்லா விசைத்தறி தொழிலை பாதுகாக்க மின் கட்டண சலுகை வழங்க வேண்டும் என்று நாடா இல்லா விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பல்லடம்,

திருப்பூர் மாவட்டத்தில் நாடா இல்லா விசைத்தறிகள் 10 ஆயிரம் தறிகள் உள்ளன. விசைத்தறி கூடத்தில் 4 தறிக்கு 2 பேர் வீதம் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். ஒரு தறிக்கு 250 மீட்டர் துணி உற்பத்தியாகிறது. 10 ஆயிரம் தறிக்கு தினந்தோறும் 35 லட்சம் மீட்டர் துணி உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு மீட்டர் துணி உற்பத்தி செய்ய ரூ.30 செலவாகிறது. அதே சமயம் ஒரு மீட்டர் துணி விற்பனை விலை ரூ.26 ஆக உள்ளது. இதனால் ஒரு மீட்டருக்கு ரூ.4 வீதம் இழப்பு ஏற்படுகிறது.

கொரோனா தொற்று பொது முடக்கம் காரணமாக பணப்புழக்கம் குறைந்து பொதுமக்களிடம் வாங்கும் சக்தி குறைந்ததால் துணி கொள்முதல் செய்ய வட மாநில ஜவுளி வியாபாரிகள் ஆர்வம் காட்டவில்லை. அதனால் விசைத்தறி ஜவுளி உற்பத்தியை குறைத்த போதிலும் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதற்காக இயங்கப்பட்ட விசைத்தறி கூடங்களில் 15 நாள் அளவிற்கு துணி தேக்கம் அடைந்துள்ளது. உற்பத்தி செலவிற்கேற்ப துணி விற்பனை விலை உயராததால் விசைத்தறியாளர்கள் வேதனை அடைந்துள்ளனர். தொழிலாளர்களுக்கு சம்பளத்தின் அடிப்படையில் தான் தீபாவளி போனஸ் வழங்கப்படுகிறது.

இந்த வருடம் கொரோனா பொது முடக்கத்தால் வேலை இழப்பு ஏற்பட்டதால் போனஸ் தொகையும் குறைந்துள்ளது. இது பற்றி கரைப்புதூர் நாடா இல்லா விசைத்தறி ஜவுளி உற்பத்தி நிறுவன உரிமையாளர் ராஜேந்திரன் கூறியதாவது:-

கொரோனா பொது முடக்கத்தின் போது வட மாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்றனர். பின்னர் பொது முடக்க தளர்வால் 70 சதவீம் பேர் மட்டுமே பணிக்கு திரும்பினர். 30 சதவீதம் பேர் வரவில்லை. அதனால் விசைத்தறி கூடத்தில் ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டு ஷிப்ட் சம்பளத்தில் ரூ.40 வரை ஊதியம் அதிகரித்துள்ளது. அதே சமயம் ஆட்கள் பற்றாக்குறை மற்றும் ஊதிய உயர்வு, துணி உற்பத்தி செலவிற்கேற்ப துணி விற்பனை விலை உயரவில்லை. மேலும் விசைத்தறி உதிரி பாகங்களின் விலை உயர்வு, நூல் ஒரு கிலோவிற்கு ரூ.15 விலை உயர்ந்துள்ளது.

மக்களிடம் வாங்கும் திறன் குறைந்துள்ளதால் வட மாநில ஜவுளி வியாபாரிகள் துணி கொள்முதல் செய்ய ஆர்வம் காட்டவில்லை. அதன் காரணமாக துணி உற்பத்தி விலையை காட்டிலும் துணி விற்பனை விலை வீழ்ச்சி அடைந்தது. அதனால் கிடங்கில் உற்பத்தி செய்யப்பட்ட துணிகளை நஷ்டத்திற்கு விற்பனை செய்ய வேண்டிய நிலைக்கு விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் தள்ளப்பட்டு உள்ளனர். நாடா இல்லா விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழிலை பாதுகாக்க அரசு மின் கட்டண சலுகை வழங்க வேண்டும். ஜி.எஸ்.டி.வரி ரிட்டன்களை உடனே வழங்க வேண்டும். வங்கிகளில் கடன் மற்றும் வட்டி தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story