விளைபொருட்களுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்ய வேண்டும் - விவசாயத்துறை மந்திரி பி.சி.பட்டீல் பேச்சு


விளைபொருட்களுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்ய வேண்டும் - விவசாயத்துறை மந்திரி பி.சி.பட்டீல் பேச்சு
x
தினத்தந்தி 15 Nov 2020 4:00 AM IST (Updated: 15 Nov 2020 9:22 AM IST)
t-max-icont-min-icon

விளைபொருட்களுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று விவசாயத்துறை மந்திரி பி.சி.பட்டீல் கூறினார்.

பெங்களூரு,

விவசாயத்துறை சார்பில் விவசாய கண்காட்சி பெங்களூரு வேளாண்மை அறிவியல் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன் தினம் நடைபெற்ற கருத்தரங்கில் விவசாயத்துறை மந்திரி பி.சி.பட்டீல் கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:-

விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். விவசாயிகள் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் மேலும் முன்னேற்றம் அடையலாம். விவசாயத்துறைக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த பிரதமர் மோடி அதிக கவனம் செலுத்தியுள்ளார்.

விவசாயிகள் தன்னம்பிக்கையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். நாம் மற்றவர்களுக்கு உணவு வழங்குகிறோம் என்று நினைத்து செயல்பட்டால் விவசாயிகள் யாரும் தற்கொலை செய்துகொள்ள மாட்டார்கள். விவசாயம் நாசம் அடைந்தால் மோசமான காலத்தை நாம் எதிர்கொள்ள வேண்டி வரும். விவசாயிகள் இல்லாவிட்டால் உண்ண உணவு கிடைக்காது. இதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். கொரோனா ஊரடங்கு காலத்தில் பெரும்பாலும் அனைத்து துறைகளும் முடங்கியது. ஆனால் விவசாயத்துறை மட்டும் எப்போதும் போல் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. அதனால் விவசாய உற்பத்தியில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

நான் அனைத்து மாவட்டங்களுக்கும் பயணம் செய்து, விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்து அவற்றை தீர்க்க முயற்சி செய்தேன். மாநிலத்தின் அனைத்து தாலுகாக்களிலும் நல்ல மழை பெய்துள்ளது. இந்த ஆண்டு 104 சதவீதம் விதைப்பு பணிகள் நடந்துள்ளன. நான் விவசாயத்துறை மந்திரியாக பொறுப்பேற்றதும் விவசாயிகளின் தற்கொலையை தடுக்க அந்த துறை சார்ந்த நிபுணர்களின் ஆலோசனைகளை கேட்டு பெற்றேன்.

கோலார் விவசாயிகள் யாரும் தற்கொலை செய்துகொள்ளவில்லை. அவர்கள் விவசாய கொள்கையை அனுசரித்து அதன் அடிப்படையில் பயிர் சாகுபடி செய்கிறார்கள். கோலார் விவசாயிகள் ஒட்டுமொத்த மாநிலத்திற்கே முன்மாதிரியாக திகழ்கிறார்கள். 20 விவசாயிகள் தொடர்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

அவற்றுக்கு 20 நடமாடும் சுகாதார நிலையங்களை தொடங்க முடிவு செய்துள்ளோம். இதை விரைவில் கொப்பல் மாவட்டத்தில் தொடங்கி வைக்க உள்ளேன். வேளாண் விளைபொருட்களுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்ய வேண்டும். அந்த நிலை வர வேண்டும். விவசாய பல்கலைக்கழகங்கள், விவசாயிகளுக்கு ஆலோசனைகளை கூற வேண்டும்.

இவ்வாறு பி.சி.பட்டீல் கூறினார்.

Next Story