சென்னை புறநகர் பகுதியில் பலத்த மழை பொதுமக்கள் நனைந்தபடியே தீபாவளி பொருட்கள் வாங்கி சென்றனர்


சென்னை புறநகர் பகுதியில் பலத்த மழை பொதுமக்கள் நனைந்தபடியே தீபாவளி பொருட்கள் வாங்கி சென்றனர்
x
தினத்தந்தி 15 Nov 2020 3:00 AM IST (Updated: 15 Nov 2020 9:49 AM IST)
t-max-icont-min-icon

சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று காலை முதல் விட்டு, விட்டு பலத்த மழை பெய்தது. பொதுமக்கள் மழையில் நனைந்தபடியே தீபாவளிக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர்.

தாம்பரம், 

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி, பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.

சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று காலை முதலே வானம் மேக மூட்டமாக காணப்பட்டது. தாம்பரம், பல்லாவரம், அனகாபுத்தூர், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காலையில் இருந்து விட்டு, விட்டு பலத்த மழை பெய்தது. இரவிலும் இந்த மழை நீடித்தது. இதனால் தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடியே சென்றனர்.

தீபாவளிக்கு பண்டிகைக்கு சிறப்பு பஸ்களில் சொந்த ஊர்களுக்கு செல்ல தாம்பரம், பெருங்களத்தூர் பஸ் நிலையங்களில் காத்திருந்த பயணிகள் அவதி அடைந்தனர்.

தீபாவளிக்கு முதல் நாள் என்பதால் பொதுமக்களும் மழையை பொருட்படுத்தாமல் நனைத்தபடியே கடைகளுக்கு சென்று தீபாவளி பண்டிகைக்கு தேவையான பொருட்கள், பட்டாசுகள், பலகாரங்களை வாங்கி சென்றனர். மழையால் மார்க்கெட் சாலைகளில் சேறும், சகதியுமாக காட்சி அளித்தது. சாலை பள்ளங்களில் தேங்கி நின்ற மழை நீரால் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் அவதி அடைந்தனர்.

அதேபோல் ஆலந்தூர், ஆதம்பாக்கம், கிண்டி, மடிப்பாக்கம், பரங்கிமலை, மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.

Next Story