பெரம்பலூரில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி மாவட்ட போலீஸ்துறை சார்பில் 3 இடங்களில் மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நேற்று நடந்தது.
பெரம்பலூர்,
பெரம்பலூரில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டும், போலீஸ் துறை கவாத்து பயிற்சி நிறைவை ஒட்டியும் விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்த்திட ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி மாவட்ட போலீஸ்துறை சார்பில் 3 இடங்களில் மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நேற்று நடந்தது. மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தொடங்கிய ஊர்வலத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து பெரம்பலூர் உட்கோட்டம் சார்பில் நடந்த மற்றொரு ஊர்வலத்தை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் பெரம்பலூரின் முக்கிய சாலைகள் வழியாக சென்று பாலக்கரை பகுதியில் நிறைவடைந்தது. இதேபோல் மங்களமேடு உட்கோட்டம் சார்பில் நடந்த விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலத்தை போலீஸ் துணை சூப்பிரண்டு மோகன்தாஸ் தொடங்கி வைத்தார். இந்த 3 ஊர்வலங்களிலும், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போக்குவரத்து போலீசார், அனைத்து மகளிர் போலீசார் என திரளானவர்கள் ஹெல்மெட் அணிந்து கலந்து கொண்டனர். மேலும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story