திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா ஏற்பாடுகளை கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் ஆய்வு செய்தார்.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தகஷ்டி திருவிழா நேற்று தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகிற 20-ந்தேதியும், திருக்கல்யாணம் 21-ந்தேதியும் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக பொறுப்பு ஏற்ற செந்தில் ராஜ் நேற்று மாலை திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி விழா ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.
அப்போது கோவிலில் பக்தர்கள் வந்து செல்லும் வழி, இலவச தரிசனப்பாதை உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். சாமி தரிசனத்திற்கு வரிசையில் நின்ற பக்தர்களிடம் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தார்.
தொடர்ந்து கோவில் யாகசாலையில் உள்ள சுவாமி ஜெயந்திநாதர் மற்றும் மூலவர், சண்முகர் உள்ளிட்ட சன்னதிகளில் சென்று சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
விழா ஏற்பாடுகள் ஆய்வு
கந்தசஷ்டி திருவிழா ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தற்போது நேரடி மற்றும் ஆன்லைன் மூலம் தினசரி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 10 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பக்தர்கள் சமூக இடைவெளியுடன், கைகளை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்த பின்னரே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். 20-ந்தேதி சூரசம்ஹார விழா, அரசு அறிவித்துள்ளபடி கடற்கரைக்கு பதிலாக கோவில் வளாகத்தில் வைத்து நடைபெறுகிறது. இதில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் சீராக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங், உதவி கலெக்டர் தனப்பிரியா, கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) கல்யாணி, உதவி ஆணையர் செல்வராஜ், தாசில்தார் முருகேசன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story