வழிபாட்டு தலங்களை திறப்பதில் யாருக்கும் வெற்றியோ, தோல்வியோ கிடையாது பா.ஜனதாவுக்கு, சஞ்சய் ராவத் பதிலடி
மராட்டியத்தில் வழிபாட்டு தலங்களை திறப்பதில் யாருக்கும் வெற்றியோ, தோல்வியோ கிடையாது என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
மும்பை,
மராட்டியத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த மார்ச் மாதம் வழிபாட்டு தளங்கள் அனைத்தும் அடைக் கப்பட்டது. மராட்டியத்தில் நோய் பாதிப்பு அதிகமாக இருந்த காரணத்தால் கடந்த 8 மாதங்களாக வழிபாட்டு தலங்கள் திறக்கப்படவில்லை. இதனை எதிர்த்து பாரதீய ஜனதா கட்சியினர் மற்றும் இந்துத்வா அமைப்பினர் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் முதல்-மந்திரி உத்தவ் தக்கரே வழிபாட்டு தலங்களை திறப்பதற்கான உத்தரவை வெளியிட்டார். அதுமட்டும் இன்றி கோவிலில் கடைபிடிக்க வேண்டிய வழிபாட்டு நெறிமுறைகளையும் அறிவித்தார். இது பாரதீய ஜனதாவுக்கு கிடைத்த வெற்றி, இந்துத்வாவுக்கு கிடைத்த வெற்றி என பாரதீய ஜனதாவினர் பலரும் கூறி வருகின்றனர்.
இந்துத்வாவின் வெற்றி
குறிப்பாக பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. ராம் காதம் அளித்த பேட்டியில், “பாரதீய ஜனதா கட்சி கொடுத்த அழுத்தம் காரணமாகவே வழிபாட்டு தலங்களை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இது இந்துத்வாவுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி” என தெரிவித்தார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் நேற்று மும்பையில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கண்டிப்பாக பின்பற்றவேண்டும்
வழிபாட்டு தலங்கள் திறந்தாலும் கொரோனா பரவாமல் இருக்க அரசு அறிவித்த வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். மக்கள் வீட்டில் அடைப்பட்டு இருக்கவேண்டும் என்பது கடவுளின் விருப்பமாக இருந்தது. இப்போதும் கடவுள் விரும்புவதால் திறக்கப்படுகிறது. எனவே வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டதை யாரும் தங்களுடைய வெற்றியாக உரிமை கொண்டாட வேண்டாம்.
குறிப்பாக இந்துத்துவாவிற்கு வெற்றி என்று யாரும் கூற வேண்டாம். ஏனெனில் இந்து கோவில்கள் மட்டும் திறக்கப்படவில்லை, அனைத்து மத வழிபாட்டுத்தலங்களும் திறக்கப்படுகின்றன. மேலும் கொரோனா பரவியதை அடுத்து பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின் படியே கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டன. இது யாருக்கும் வெற்றியும் இல்லை, தோல்வியும் இல்லை.
இவ்வாறு சஞ்சய் ராவத் கூறினார்.
Related Tags :
Next Story