மராட்டியத்தில் இன்று வழிபாட்டு தலங்கள் திறப்பு சித்தி விநாயகர் கோவிலில் தினமும் 1,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி
மராட்டியத்தில் இன்று முதல் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட உள்ளன. இதில் மும்பையில் உள்ள பிரசித்தி பெற்ற சித்தி விநாயகர் கோவிலில் தினந்தோறும் 1000 பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட உள்ளனர்.
மும்பை,
கொரோனா பிரச்சினை காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மராட்டியத்தில் வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளன. எனவே மாநிலத்தில் வழிபாட்டு தலங்களை திறக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன. மேலும் இதுதொடர்பாக கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியும், முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதினார்.
இந்தநிலையில் இன்று முதல் மாநிலத்தில் வழிபாட்டு தலங்களை திறக்க மாநில அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதற்கான அறிவிப்பை நேற்று முன்தினம் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்தார். மேலும் பொதுமக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.
செல்போன் செயலி
இந்தநிலையில் மும்பை பிரபாதேவியில் உள்ள பிரதிபெற்ற சித்தி விநாயகர் கோவிலில் முதல்கட்டமாக தினந்தோறும் 1000 பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். இது குறித்த தகவலை கோவில் அறக்கட்டளை தலைவர் ஆதேஷ் பந்தேகர் கூறினார். மேலும் அவர் கூறியதாவது:-
பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு முன்பதிவு செய்ய வசதியாக செல்போன் செயலியை வடிவமைத்து உள்ளோம். பக்தர்கள் shrisiddhivinayak temple என்ற செல்போன் செயலியை பதிவிறக்கம் செய்து தங்களின் விவரங்களை கொடுத்து தரிசனத்திற்கு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். இதையடுத்து அவர்களுக்கு க்யு.ஆர் கோடு வழங்கப்படும். ஒரு நாளில் 1000 பேருக்கு க்யு.ஆர். கோடு வினியோகிக்கப்படும்.
ஒருமணி நேரத்துக்கு 100 பக்தர்கள்
அதை பயன்படுத்தி பக்தர்கள் கோவிலுக்கு செல்லலாம். அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி உரிய சோதனைகளுக்கு பிறகு பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். இதேபோல பக்தர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து இருக்கவேண்டும். அவர்களின் உடல் வெப்பநிலை சீராக இருக்க வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு 100 பக்தர்களை கோவிலுக்குள் அனுமதிக்க உள்ளோம். முதியவர்கள் ஆன்லைன் மூலம் சாமி தாிசனம் செய்ய அறிவுறுத்துகிறோம்.
இவ்வாறு அவா் கூறினார்.
Related Tags :
Next Story