நிதி நிறுவனம் நடத்தி ரூ.12 கோடி மோசடி பணத்தை இழந்த 134 பேர் போலீசில் புகார் உரிமையாளருக்கு வலைவீச்சு


நிதி நிறுவனம் நடத்தி ரூ.12 கோடி மோசடி பணத்தை இழந்த 134 பேர் போலீசில் புகார் உரிமையாளருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 15 Nov 2020 10:54 PM GMT (Updated: 15 Nov 2020 10:54 PM GMT)

பெங்களூருவில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.12 கோடி மோசடி செய்த வழக்கில் பணத்தை இழந்த 134 பேர் இதுவரை புகார் அளித்துள்ளனர். தலைமறைவான உரிமையாளரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

பெங்களூரு,

பெங்களூரு ஞானபாரதி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தனியார் நிதி நிறுவனம் நடத்தியவர் பட்டேல் ஆனந்த். இவர், தனது நிதி நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு அதிக வட்டி கொடுப்பதாக விளம்பரம் செய்திருந்தார். அதாவது ரூ.1 லட்சம் முதலீடு செய்பவர்களுக்கு மாதம் ரூ.2,500 வட்டி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை நம்பிய பலர், அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பல லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தார்கள்.

கடந்த பிப்ரவரி மாதம் வரை நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு மாதந்தோறும் வட்டி பணம் கொடுக்கப்பட்டது. அதன்பிறகு கடந்த 8 மாதங்களாக வட்டியும், முதலீடு செய்த பணத்தையும் அவர் திரும்ப கொடுக்கவில்லை.

134 பேர் புகார்

இந்த நிலையில், பட்டேல் ஆனந்த் நடத்தி வந்த நிதி நிறுவனம் பணத்தை திரும்ப கொடுக்காமல் மோசடி செய்து விட்டதாக கூறி, கடந்த 12-ந் தேதி ஒருவர் ஞானபாரதி போலீசில் புகார் அளித்திருந்தார். அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், பட்டேல் ஆனந்த் தனது நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களிடம் ரூ.12 கோடி வரை வாங்கி மோசடி செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக பட்டேல் ஆனந்த், அவரது மனைவி உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த 12-ந் தேதியில் இருந்து நேற்று வரை பணத்தை இழந்த 134 பேர் ஞானபாரதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, தலைமறைவான உரிமையாளர் உள்பட 4 பேரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Next Story