வேலைக்கு ஆட்கள் தேவை என விளம்பரம் செய்து பெண்ணிடம் நூதன முறையில் நகை பறித்த கணவன்-மனைவி
வேலைக்கு ஆட்கள் தேவை என விளம்பரம் செய்து பெண்ணிடம் நூதன முறையில் நகை பறித்த கணவன்-மனைவி கைது செய்யப்பட்டனர்.
ஆலந்தூர்,
கன்னியாகுமரி மாவட்டம் பரக்காவட்டுவில்லை கிராமத்தைச் சேர்ந்தவர் மினிமோல் (வயது 27). இவர், தொலைக் காட்சியில் செய்தி வாசிப்பாளர் வேலை தேடி சென்னை வந்து கிண்டியில் தனது தோழிகளுடன் தங்கி இருந்தார்.
ஆன்-லைன் வலைதளத்தில் சினிமாவில் நடிக்க மற்றும் செய்தி வாசிப்பாளர் பணிக்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரத்தை பார்த்து அதில் குறிப்பிட்டு இருந்த எண்ணில் தொடர்பு கொண்டார். அதில் பேசியவர், மேக்கப் ஒத்திகை செய்யவேண்டும் என்று துரைப்பாக்கத்தில் உள்ள ஒரு உணவக விடுதிக்கு வரும்படி கூறினார்.
அதன்படி அங்கு சென்ற மினிமோலிடம், அங்கிருந்த ஒரு ஆணும், பெண்ணும், கழுத்து வரை மேக்கப்போடவேண்டும் என்பதால் கழுத்தில் அணிந்துள்ள நகைகளை கழற்றி வைத்துவிட்டு முகத்தை கழுவிவிட்டு வரும்படி கூறினர்.
மினிமோலும் தான் அணிந்து இருந்த தங்க சங்கிலி உள்பட அனைத்து நகைகளையும் கழற்றி வைத்துவிட்டு கழிவறைக்குள் சென்றார். உடனே அவர்கள் 2 பேரும் கழிவறை கதவு மற்றும் விடுதி அறை கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டு, டி.வி. சத்தத்தையும் கூட்டி வைத்துவிட்டு மினிமோல் கழற்றி வைத்து இருந்த நகைகளை அள்ளிச்சென்று விட்டனர்.
மினிமோல் நீண்ட நேரமாக கதவை தட்டியதால் விடுதி மேலாளர் வந்து கதவை திறந்தார். பின்னர்தான் அவர்கள் இருவரும் தன்னிடம் நூதன முறையில் நகையை பறித்தது மினிமோலுக்கு தெரிந்தது.
இதுபற்றி துரைப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இது தொடர்பாக பாலவாக்கம் குப்பம் பகுதியில் வசிக்கும் தேனி பண்ணையபுரத்தை சேர்ந்த ராவின் பிஸ்ட்ரோ (30), அவரது மனைவி தீபா என்ற செம்பகவள்ளி (38) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
ராவின் பிஸ்ட்ரோ பிரபல ஓட்டலின் வேளச்சேரி, மேடவாக்கம் ஆகிய கிளைகளில் மேலாளராக பணியாற்றி வந்தார். அந்த வேலையை விட்டபின்னர், கணவரை பிரிந்து 2 மகன்களுடன் வசித்த தீபாவை திருமணம் செய்துகொண்டார்.
கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் நீலாங்கரை மற்றும் திருவான்மியூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் ஊர்காவல் படையில் தீபா பணியாற்றியதும் தெரிந்தது. கணவன்- மனைவி இருவரும் ஏஜென்சி நடத்தி ஆன்-லைன் மூலம் வீட்டு வேலைக்கு ஆட்களை தேர்வு செய்து அனுப்பி வந்தனர்.
அதிக பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு சினிமாவில் நடிக்கவும், செய்தி வாசிக்கவும் ஆட்கள் தேவை என்று ஆன்-லைன் வலைதளத்தில் விளம்பரம் செய்துவிட்டு அப்படி வந்தவர்களிடம் இதுபோல் நகை பறித்ததும் தெரிந்தது. கைதான கணவன்- மனைவி இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story