நெல்லை கலெக்டராக விஷ்ணு பொறுப்பு ஏற்பு


நெல்லை கலெக்டராக விஷ்ணு பொறுப்பு ஏற்பு
x
தினத்தந்தி 16 Nov 2020 9:10 AM IST (Updated: 16 Nov 2020 9:10 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்ட கலெக்டராக விஷ்ணு பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.

நெல்லை,

நெல்லை மாவட்ட கலெக்டராக பணியாற்றிய ஷில்பா, தமிழக சுகாதாரத்துறை இணை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குனர் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி துறை இயக்குனராக பணியாற்றிய விஷ்ணு, நெல்லை மாவட்ட புதிய கலெக்டராக நியமிக்கப்பட்டார்.

புதிய கலெக்டர் விஷ்ணு நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராசலம், சேரன்மாதேவி உதவி கலெக்டர் பிரதீக் தயாள் மற்றும் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

புதிய கலெக்டராக பொறுப்பேற்ற விஷ்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-

பொதுமக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் முக்கியத்துவம் அளிக்கப்படும். அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு விரைவில் எளிதில் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும். இன்று (திங்கட்கிழமை) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அப்போது அதிகாரிகளுடன் ஆய்வு நடத்த உள்ளேன். அப்போது என்னென்ன திட்டங்களை எப்படி செயல்படுத்த வேண்டும்? என்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

நான் முன்பு சேரன்மாதேவி உதவி கலெக்டராக பணியாற்றியதால், இந்த பகுதி மக்களின் தேவைகள், பிரச்சினைகள் எனக்கு நன்கு தெரியும். இதுதொடர்பாக அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்துவது, ஸ்மார்ட் சிட்டி திட்டம் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு முன்பு சேரன்மாதேவி உதவி கலெக்டராக பணியாற்றியபோது, கடையம் யூனியன் மந்தியூர் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதி மக்களுக்கு நீண்ட நாட்களாக பட்டா கிடைக்காமல் இருந்தது. அப்போது அவர் துரித நடவடிக்கை எடுத்து அப்பகுதி மக்களுக்கு பட்டா வழங்க ஏற்பாடு செய்தார்.

இதனால் மகிழ்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு உதவி கலெக்டரின் பெயராலேயே ‘விஷ்ணு நகர்’ என்று பெயர் சூட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story